Donnerstag, September 14, 2006

உயிர்ப்பு - சிறுகதைத்தொகுப்பு


7.1.2006 அன்று, அவுஸ்திரேலியாவின் mellbourne நகரில், திரு முருகபூபதி அவர்களால் தொகுக்கப் பட்ட "உயிர்ப்பு" நூல் வெளியிட்டு வைக்கப் பட்டது.

உயிர்ப்பு சிறுகதைத் தொகுப்பில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கெண்டிருக்கின்ற 20 எழுத்தாளர்களின் 20 சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன.


அவற்றில் முதற் பத்துச் சிறுகதைகள் மீதான எனது பார்வை

உசா யவாகரின் மலரொன்று கருகுகின்றதோ!
எந்த நாடு எந்தத் தேசம் எதுவாயினும் பெண் என்பவளுக்கு ஏற்படுகின்ற சில துயர்கள் தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன. உசா யவாகரின் மலரொன்று கருகுகின்றதே கதையும் இப் பிரச்சனையைத் தொட்டுள்ளது.

ஆபிரிக்கக் கண்டத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப் பட்ட இக்கதையில் சம்பியா நாட்டைச் சேர்ந்த விக்டோரியா என்ற 20வயது இளம் பெண் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பத்தில் பணிப்பெண்ணாய் பணி புரிகிறாள். அந்தக் குடும்பத்தில் நல்லவளாய் முத்திரை பதித்து நட்போடு பழகும் அவள் தனது பணியை நேர்த்தியாகவும் விசுவாசத்தோடும் செய்யும் ஒருத்தியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்.

அவள் தனது 16வது வயதிலேயே நண்பன் என்ற பெயரோடு பழகிய ஒருவனால் தாயாக்கப் பட்டுக் கைவிடப் பட்டவள். தற்போது மீண்டும் ஒருவனோடு நட்பாகி மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் இணைந்த போது எயிட்சையும் அவனிடமிருந்து பெற்று இறந்து போகிறாள்.

இரு ஆண்களிடமிருந்தும் சுகத்தையும் விட சுமைகளையே அதிகமாகப் பெற்ற விக்ரோறியாவின் இறப்பு கதாசிரியரின் மனதில் ஏற்படுத்திய பாதிப்பும், விரக்தியும் கதையின் முக்கிய அம்சங்களாக இருந்தாலும் கதையில் இன்னும் பல விடயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.

குறிப்பாக, எந்தப் புலத்தைக் கொண்டு ஒரு சிறுகதை அமைகிறதோ அந்தப் புலத்தோடு வாசகரை அழைத்துச் செல்வதும் அந்தப் புலம் பற்றிய செய்திகளை கதையினூடு வாசகனுக்குத் தருவதும் சிறப்பானது. அந்த வகையில் உசா யவாகர் வெற்றி கண்டுள்ளார். கதையில் கிடைத்த பல சுவையான தகவல்களில் சம்பியாவில் முருங்கைக்காய் மரங்கள் இருப்பதுவும் முருங்கைக்காயை அவர்கள் Devil stick என்பதுவும் நான் அறிந்திராத தகவல்கள்.

கதை இத்தனை நீளமாக இல்லாமல் குறுகலாக இருந்திருந்தால் நறுக்கென்று அமைந்த மிக அருமையானதொரு கதையாக மிளிர்ந்திருக்கும்.

அ.சந்திரகாசனின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடி
கலை வளர்பதும், தமிழ் வளர்ப்பதும் தமை வளர்ப்பதற்க்கு என்ற நிலை புலத்தில் மட்டுமல்ல தாய் நிலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் புலத்தில் கலை என்றால் என்னவென்றே தெரியாத…, தமிழ் மேல் துளி கூட அக்கறையில்லாத…, சிலர் கலை வளர்ப்பதாகவும், தமிழ் வளர்ப்பதாகவும் சொல்லிக் கொண்டு தமது அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாகவே இருக்கின்றன. இப்படியானவர்களின் பாசாங்கும் போலியும் ஓரளவு சிந்திக்கக் கூடியவர்களுக்குப் புரியாமலும் இல்லை. அ.சந்திரகாசனின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடியும் இப்படியான போலிகளைத்தான் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

"தமிழ், தமிழ்" என்று மேடைகளில் முழங்கும் பல பிரபலங்களின் பிள்ளைகள் தமிழே தெரியாமல் இருப்பதை நாம் நடப்பிலே பார்த்திருக்கிறோம். இக் கதையிலே தமிழுக்குச் சேவை செய்வதற்காகவே சிட்னி தமிழ்ப் பாடசாலையின் தலைவராகத் தெரிவு செய்யப் படுகிறார் கணேசானந்தம். தமிழ்ப் பாடசாலையில் தமிழ் கற்பிப்பது மட்டும் போதாது. வீட்டிலும் தமிழிலேயே பேசுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றார்.

ஆனால் இவ்வளவு பெரிய அந்தஸ்து வந்த பின் அவர் மகன் வெளியிலே ஆட்களின் முன் தன்னோடு தமிழில் பேசி மானத்தை வாங்கி விடக் கூடாது என்ற மனைவியின் வேண்டுகோளை ஆமோதிக்கிறார். இது உடனடியாகச் சிரிப்பை ஏற்படுத்தினாலும் சிந்திக்கும் போது எமது சமூகத்தின் ஆரோக்கியக் கேட்டை உணர்த்துகிறது.

ரதியின் நெருடல்
அம்மா தெய்வத்துக்குச் சமனானவள்தான். அம்மாவுக்காக மகன் எதையும் விட்டுக் கொடுப்பதுவும், மகனுக்காக அம்மா விட்டுக் கொடுப்பதும் எத்தனை சங்கடமானாலும் இயல்பிலே நடக்கக் கூடிய விடயங்கள். ஆனால் இங்கே இவர்களிடையே மனைவி என்றொருத்தி வரும் போது புரிந்துணர்வுகள் சரியாக அமையாத போது தவிர்க்க முடியாத பல சங்கடங்கள் ஏற்படலாம்.

ரதியின் நெருடல் இந்தியாவைப் பின் புலமாகக் கொண்டு எழுதப் பட்ட கதையாயினும் ஒரு சாதாரண குடும்பத்தில் ஏற்படக் கூடிய அம்மா, மகன், மனைவிக்கு இடையிலான யதார்த்தமான இந்தப் பிரச்சனையைத் தொட்டிருக்கிறது.

இந்தக் கதையில் அம்மாவின் சில புரிந்துணர்வற்ற தன்மைகளும் அதனாலான சிக்கல்களும் அம்மாவை முதியோர் விடுதியில் சேர்க்குமளவுக்கு வருகிறது. இது குற்ற உணர்வுடனான சலனத்தை ஏற்படுத்தினாலும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நினைப்பில் வீட்டிலே குறையும், கூப்பாடுமாய் இருப்பதை விட அவரவர்க்கு ஏற்ற வழியில் தனியாக வாழ்வது சந்தோசத்தையும் நிம்மதியையும் தரலாம் எனபதை உணர்த்துகிறது.

கதையில் கதாசிரியர் அம்மாவைச் சந்தோசமாக வைத்திருப்பது மட்டுமல்ல… மனைவி குழந்தைகளையும் சந்தோசமாக வைத்திருப்பது ஒரு ஆணின் கடமை என்ற நல்ல விடயத்தையும் சுட்டியுள்ளார்.

கதையில் வரும் சம்பாசணைகளை பேச்சுத் தமிழிலேயே தந்திருந்தால் கதையிலும் யதார்த்தம் மிளிர்ந்திருக்கும். கதாசிரியரின் வாழ்நில வட்டாரச் சொற்களும் வாசகருக்குக் கிடைத்திருக்கும்.

சாந்தா ஜெயராயின் அம்மா இல்லாத ஒரு மணி நேரம்
அம்மா…! எமது இளமைப்பருவத்தில் அவள் இல்லாத பொழுதுகளை எம்மால் எண்ணிப் பார்க்கவே முடியாது. எமக்கு எல்லாமே அவளாகத்தான் இருப்பாள். இந்த நிலையில் அவளின் இறப்பு என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

சாந்தா ஜெயராயின் அம்மா இல்லாத ஒரு மணி நேரம் அம்மா இறந்து விட்டதாகக் கனவு கண்ட ஒரு பெண்ணின் கதை.

செல்லமாகவும், வசதியாகவும் புலத்தில் வளர்ந்த ஒரு பதினைந்து வயதுப் பெண் திடீரென அம்மாவை இழந்து விட்டால் அவளின் உணர்வுகள் எப்படியிருக்கும் என்பதை சாந்தா ஜெயராய் சொன்ன விதம் மிக அழகாக அமைந்துள்ளது.

ஆனால் அம்மா இறந்து விட்டதாகக் கனவு கண்ட ஒரு பெண்ணின் கனவில் இத்தனை விடயங்களும் வந்து விடுமா என்பது கேள்விக் குறியாகிறது. அம்மா திடீரென இறந்து விட்டால்… நினைத்துப் பார்க்கவே முடியாத விடயம். அதைக் கற்பனை பண்ணிப் பார்க்கும் போது இத்தனை உணர்வுகளும் ஒருங்கே வந்து விடுமா?

ரவியின் கரைந்துரையும் நாகங்கள்
புலம் பெயர்ந்தாலும் நாம், எமது ஊர், எம்மவர் என்ற ஒரு பற்றுதலோடும் உண்மையாகவே உதவும் நோக்கோடும் வாழ்பவர்கள் மிகச்சிலரே. இக் கதையில் வரும் பி.எம் மும் அப்படியான ஒரு நன்நோக்குடையவர். உணவு விடுதி ஒன்றை நடாத்தி தானும் வாழ்ந்து ஊருக்கும் உதவிக் கொண்டிருக்கும் அவரின் இனப்பற்றும் ஊர்ப்பற்றும் இயல்பாகவே அவரை மற்றவர்களுக்கும் உதவ வைத்தது.

அவரது அந்த நன்நோக்கை தனக்குச் சாதகமாக்கி அவரது உதவியைப் பெற்று அவரது உணவு விடுதியிலே வேலை செய்து தன்னை நிலைப் படுத்திக் கொண்ட ஒருவர் அவருக்கு எதிராகச் செயற்பட முனைந்தது ஊரிலே இரும்புக் கடையில் வேலை செய்த ஒருவர் சில வருடங்களில் தானே இரும்புக்கடை ஒன்றைத் திறந்த ஏமாற்று வித்தையை ஞாபகப் படுத்தியது.

புவனா இராசரட்ணத்தின் அர்த்தங்கள்
பணம் தேடுவது ஒரு அவசியமான செயற்பாடாயினும் புலத்தில் சக்திக்கு மீறி வீடு கார் தளபாடம் என்று வாங்கி விட்டு அதற்காக தமது வாழ்வைத் தொலைப்பவர்கள் பலர். இவர்களில் பலர் தமது பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் தேவைப்படும் அன்பு அணைப்பு ஆதரவைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. பணத்தாலும் பொருளாலும் பிள்ளைகள் திருப்தி அடைந்து விடுவார்கள் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு பிள்ளைகளையே தொலைத்து விடுவார்கள்.

புவனா இராசரட்ணத்தின் அர்த்தங்கள் கதையிலும் பெற்றோர் வேலை வேலை என்று திரிய வீட்டில் எந்தப் பிடிப்பும் இல்லாத சூழ்நிலை உருவாக மகன் முரளி போதை மருந்துக்கு அடிமையாகிறான். நீட்டி முழக்காமல் நறுக்கெனச் சொல்லப் பட்ட சிந்திக்க வைக்கும் கதை.

கல்லோடைக்காரனின் மறக்குமா மண்வாசைன…?
சிலர் புலம் பெயர்ந்து எத்தனை வருடங்கள்தான் ஆனாலும் அங்குள்ள நல்லவைகளைக் கண்டும் அனுபவித்தும் அந்தச் சூழலை தமக்குச் சாதகமாக்கி மகிழ்ச்சி கொள்வதை விடுத்து எப்போதுமே ஊரில் உள்ளவைகளையும், ஊரில் வாழும்போதான காலங்களையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

இந்தக் கதையில் அவுஸ்திரேலிய மண்ணில் வாழும் ஒருவர் ஒவ்வொரு விடயத்தையும் ஊர் நடப்புகளோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு மனம் பொருமுகிறார். ஊர் நினைவுகள் மறக்க முடியாதவைதான். அதற்காக அதையே நினைத்து ஏங்கி ஏங்கி இப்படி வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்த்தும் விதமான கதை. சொல்ல வந்த விடயம் நல்ல விடயம். சற்றுக் குறுக்கிச் சொல்லியிருந்தால் சொன்ன விதமும் மிக நன்றாக அமைந்திருக்கும்.

நித்தியகீர்த்தியின் அது ஒரு பருவகால விளையாட்டு
இணையமும், மின்னஞ்சலும் காதல் பரிமாற்றங்களுக்கான ஊடகங்களாக மாறிவிட்ட இன்றைய காலத்திலும், வேலியினூடு காதல் கடிதங்களைப் பரிமாறிய அன்றைய காலத்திலும் காதல் ஒன்றேயானாலும் அதனது வெளிப்பாடுகள் வேறு விதமான சந்தோசங்களைத் தருவனவாக இருந்தன.

நித்தியகீர்த்தி அவர்களின் அது ஒரு பருவகால விளையாட்டு சொல்ல வந்த விடயம் வேறு கோணத்தில் கனமாக இருந்தாலும் கதையை வாசிக்கும் போது அன்றைய காதலும் வேலிச்சண்டையும் கறுத்தக்கொழும்பான் மாம்பழமும்.. என்று மெல்லிய கிளுகிளுப்புடன் எம்மை அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.

கவித்துவம் கலந்து நளினமாக எழுதப் பட்ட இக் கதையின் சாராம்சம், சமூகம், அந்தஸ்து... என்ற போலி கௌரவங்களுக்குப் பலிக்கடாவாகிப் போன வாணி என்ற ஒரு பெண்ணின் வாழ்வைக் கொண்டுள்ளது. பருவத்தே அரும்பிய ஒரு காதல் காரணமாக அவள் 17 வயதிலேயே தன்னை விடப் 12 வயது அதிகமான நந்தகுமாருக்கு மனைவியாக்கப் பட்டு விட்டாள். அம்மாவின் போலி கௌரவந்தான் அதற்கு முக்கிய காரணம்.

வாணியால் அந்த வயதில் அம்மாவை மீற முடியவில்லை. தற்கொலை செய்யும் எண்ணத்தையோ எங்காவது ஓடி விடும் எண்ணத்தையோ அவளால் செயற் படுத்தவும் முடியவில்லை. அதற்குள் அவள் தாயாகியும் விட்டாள். ஆனாலும் திருமண பந்தத்தில் அவள் மனம் ஒட்டவும் இல்லை. ஒரு வேளை நந்தகுமார் வாழ்வின் சூட்சுமங்களை அறிந்தவராக அவளோடு வேறு மாதிரிப் பழகியிருந்தால் அவளும் பழசுகளை மறந்து குடும்பத்துக்குள் முழுமனசோடு இணைந்திருக்கலாம். அது நடக்கவில்லை. 23 வருடங்களின் பின் தன் மகனுக்கும் ஒரு வாழ்வு அமைந்த பின் அவள் நந்தகுமாரை விட்டுப் போகத் துணிகிறாள். ஒரு புரட்சியான கதைதான்.

ஆனால் எத்தனை ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் மனைவியை விட்டுப் போவது என்பதும், மனைவி கணவனை விட்டுப் போவது என்பதும் அத்தனை சுலபமான விடயமல்ல. அது சிலரால் மட்டுமே முடிந்த விடயம். இங்கு வாணியின் குணாதிசயத்தைப் பார்த்தால் அவளிடம் 23 வருடங்களாக அந்தத் துணிவு இல்லை. 23 வருடங்களாக வராத அந்தத் துணிவு 23 வருடங்களின் பின் அவளிடம் வருமா என்ற ஒரு கேள்வி என்னுள் எழுகிறது.

இப்படியான ஒரு புரட்சியான முடிவைச் சொன்ன கதாசிரியரின் மனதில், பெண்கள் அழகாக உடுத்துவதும், நகைகள் அணிவதும் தமது அழகைப் புருசனுக்குக் காட்டுவதற்கோ அன்றி வேறு ஆண்களுக்குக் காட்டுவதற்கோ என்ற தப்பான அபிப்பிராயம் பதிந்துள்ளதைக் கதையினூடு காண முடிகிறது.

எஸ். கிருஸ்ணமூர்த்தியின் பசி
பணத்தால் எதையும் வாங்கி விடலாம் என்பது பலரின் நினைப்பு. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் சிலதை எம்மால் வாங்கி விட முடியாதென்ற உண்மையை எஸ்.கிருஸ்ணமூர்த்தியின் பசி உணர்த்துகிறது.

அவுஸ்திரேலியாவில் வசதியான சூழ்நிலையில் வாழும் தர்சனிடம் பணம் போதுமான அளவு இருந்தும் பக்கத்தில் கடைகள் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் மகளின் பசியை போக்க முடியவில்லை. மகள் பசியால் துடித்த போதுதான் ஈழத்தில் உணவின்றி அல்லலுறும் உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகம் எழுகிறது.

சுருக்கமாக நல்ல விடயமொன்றை மற்றவர்களுக்கு உணர்த்தி விட்ட கதை.

களுவாஞ்சிக்குடி யோகனின் அன்னம்
காதலும் தோல்விகளும் என்றைக்குமே தவிர்க்க முடியாதவை. காதல் தோல்விகள் எமது பெண்களைக் கூனிக் குறுக வைத்ததும், தற்கொலை வரை கொண்டு சென்றதும் போராட்டம் என்ற ஒன்று எமது நாட்டில் தொடங்குவதற்கு முன் சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.

களுவாஞ்சிக்குடி யோகனின் அன்னம் அன்றைய சீர், சீதனங்களில் காதலைத் தொலைத்தவள். ஏறத்தாள 40-45 வருடஙகளின் முன் காதலிப்பதே பாவமெனக் கருதப் பட்ட சூழலில் வாழ்ந்த அன்னமும் தற்கொலை வரை செல்லத் தயங்கவில்லை. ஆனாலும் சாகவில்லை.

உறவினரையோ, காதலனாக இருந்து ஏமாற்றிய ஆறுமுகத்தையோ பார்க்க விரும்பாமல் சிங்கப்பூருக்குச் சென்று விட்டாள். அங்கு ஒரு சந்தர்ப்பத்தில் சைமன் என்பவரோடு மனம் ஒத்துப் போக அவரோடு தன் வாழ்வையும் இணைத்து அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து விட்டாள். ஆனாலும் மனதின் அடியில் ஆறுமுகத்தின் மீதிருந்த வெறுப்பு மட்டும் அவளை விட்டு அகலவில்லை. தனது 65வது வயதில் ஒரு திருமண வைபவத்தில் எதிர் பாராத விதமாக அவனைக் காண நேர்ந்த போது உடனேயே அங்கிருந்து வெளியேறி நாட்டுக்குத் திரும்புகிறாள்.

கதை சற்று நீளமாக இருந்தாலும் சொல்லப் பட்ட விதம் நன்றாக உள்ளது. ஆனாலும் புதிய சிந்தனைகளோடு வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுமளவுக்கு தன்னை மாற்றிக் கொண்ட அன்னம் ஆறுமுகத்தைக் கணடதும் அவ்விடத்தை விட்டு நகர வேண்டுமா எனவும் எண்ணத் தோன்றுகிறது.

சந்திரவதனா
ஜேர்மனி
7.1.2006

Montag, Juli 17, 2006

இரண்டாம் ஜாமங்களின் கதை(நாவல்)

1980களின் முற்பகுதியில் ஐந்தாறு தமிழ் முஸ்லிம் குடும்பங்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே பேசுகிற புத்தகம் "இரண்டாம் ஜாமங்களின் கதை". ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத் தொகுப்பின் மூலமாக கவனம் பெற்ற முக்கியக் கவிஞர் சல்மாவின் முதல் நாவல் இது.

இரண்டாம் ஜாமங்களின் கதைக்கான மதிப்புரை
- குவளைக் கண்ணன் -

வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை,
நாகர்கோவில் - 629 001.
முதல் பதிப்பு - டிசம்பர் 2004
பக். 520, ரூ. 250/-

1980களின் முற்பகுதியில் ஐந்தாறு தமிழ் முஸ்லிம் குடும்பங்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே பேசுகிற புத்தகம் "இரண்டாம் ஜாமங்களின் கதை". ஒரு ரம்ஜான் நோன்புக் காலத்துக்கு முன்னர் தொடங்குகிற நாவல் அடுத்த ரம்ஜான் நோன்பு வருவதற்குள் முடிந்துவிடுகிறது. நாவலின் பெரும்பகுதியும் ராபியா என்னும் சிறுமியின் வாயிலாகவும் அவளைவிட நான்கைந்து வயது மூத்தவளாக இருக்கக்கூடிய அவளது அக்காவான (பெரியப்பா மகள்) வஹிதா என்னும் சிறுமியின் வாயிலாகவும் சொல்லப்படுகிறது. கதையில் காதர், கரீம், சையது, சிக்கந்தர், சுலைமான், பஷீர் என்னும் ஆண்கள் வருகிறார்கள். எந்த ஆணுடைய சித்திரத்துக்கும் ஓரிரு தீற்றலுக்கும் கூடுதலாகக் கவனம் கிடைப்பதில்லை. அவர்கள் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அறியப்படாத வாழ்வுமுறையைக் களமாகக் கொண்டு அறியப்படாத பெண் கதாபாத்திரங்கள் மூலம் பெண்ணின் நிலையை, பெண்ணின் பாடுகளைப் பேசுகிற புத்தகம் இது.

ழுத்து வகைகள் மகிழ்ச்சியைப் பேசுவதைவிட, அநேகமாகத் துன்பத்தையும் வலியையும் பேசும்போதே கூடுதல் கலைத்தன்மை கொண்டவையாக அமைகின்றன. சாதாரணமாக நாம் இந்தத் துன்பத்தையும் வலியையும் மகிழ்ச்சிக்கும் சுகத்துக்குமான எதிர்நிலையாகவே காண்கிறோம். சாதாரணமாக என்னும் சொல்லை இலக்கியத்திற்கு உபயோகிக்க முடியுமா? இலக்கியம் நமது மனத்தின் ஆழ்தளங்களில் இயங்குகிறது, புழுக்கத்திலுள்ள மனத் தளங்களில் இயங்குவதில்லை. நாம் நடைமுறையில் பார்க்கக் கூடிய மாற்றங்கள் ஆழங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற மாற்றங்களின் சிறு அறிகுறிகளே. வலி என்னும்போது தலைவலிபோல் உடனடி நிவாரணம் கிடைத்துவிடக் கூடிய வலியல்ல. ஒரு வகையில் ஓரிரு நிமிடங்களில் நிகழக்கூடிய பிள்ளைப் பேறுக்காக ஒன்பது மாதங்கள் சுமக்கிற வலியைச் சொல்லலாம். நீண்டகாலக் கெடுவுள்ள வலி என்பதற்காகவும் புதியதற்குப் பிறப்பளித்தல் இதில் உள்ளதாலும் மட்டுமே இதுவும்கூட ஒரு வசதிக்காக இங்கே சொல்லப்படுகிறது.
வலியை அசௌகரியத்தோடும் நிராசையோடும் தொடர்புபடுத்திப் பழகிவிட்டோ ம். வலியைத் தன்னுடையதேயாகக் கருதிக்கொண்டு சில குறிப்பிட்ட சம்பவங்களாலும் காரணங்களாலும் சில குறிப்பிட்ட நபர்களாலும் ஏற்படுவதாகக் கருதிக் கசந்துபோகிறோம். கசப்பைப் பரவ விடுகிறோம். இது பண்படாத, ஆழமற்ற, மேல் மனத்தில் ஏற்படுவது. இதுவும் ஓர் அறிகுறி மட்டுமே. ஆழ்மனத்தில் ஏற்படுகிற மாற்றங்களின் வலி, அந்தக் கட்டத்தின் ஏதோவொரு நடவடிக்கையால் ஏற்படுகிற அசௌகரியத்தால் தனிப்பட்ட வலியாக நம்மால் உணரப்படுகிறது.

ந்தக் கதையில் வரும் ஆண்களில் அப்துல், பஷீர் என்னும் இரண்டு ஆண்கள் சற்றுச் சாதகமான சித்தரிப்பைப் பெறுகின்றனர். இதில் அப்துல் இறந்துபோனவர். பஷீர் ஐந்நூறு பக்க நாவலில் ஒன்றே முக்கால் பக்கங்களுக்கு வருகிறார். கரீம் என்பவர் வேற்று இனப் பெண்ணுடன் தொடர்புவைத்துள்ளார். கணவனைப் பிரிந்து வந்த இரண்டு பெண்கள் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் இருவேறு தலைமுறையைச் சார்ந்தவர்கள். இதில் முந்தைய தலைமுறைப் பெண்ணின் தொடர்பு தெரிவதில்லை, மற்ற பெண் வேற்று இன ஆணோடு தொடர்புகொள்கிறார். இருவருமே துர்மரணம் அடைகிறார்கள். வேறொரு பெண் கணவனோடும் இரண்டு ஆண் குழந்தைகளோடும் உள்ளவள் தனது இனத்து ஆணோடு தொடர்புவைத்திருக்கிறாள். இவள் இறக்கவில்லை. ஓர் ஏழைப்பெண் வேற்று இன ஆணைத் திருமணம் செய்து கொள்கிறாள். இவளும் துர்மரணம் அடைகிறாள்.

நாவலின் தொடக்கத்தில் துக்க வீட்டுக்குத் தன்னுடன் அழைத்துப் போகிற தனது மகளிடம் பதற்ற முற்றுத் தாவணி அணிய வைக்கிறாள் அவளது தாய். அந்தச் சிறுமி ஐந்தாவதோ ஆறாவதோ படிப்பவள். மும்தாஜின் கணவன் வெளிநாட்டில் வேலையிலிருப்பவன், இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வந்து போகிறவன், இந்தத் துடிப்பான பெண்ணுக்குத் தனது கருப்பை வளர்ச்சி அடையவில்லை என்று தெரிந்ததும் இசிவுநோய் (லீஹ்stமீக்ஷீவீணீ) வந்துவிடுகிறது. அவள் தாய்வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அவளது கணவனுக்கு வேறொரு திருமணம் செய்துவைக்கப்படுகிறது. ராபியாவின் வேற்று இனத் தோழி ஒருத்தியின் தாய்க்கு இரண்டு கணவர்கள் இருப்பதாகக் காட்டப்படுகிறது. வஹிதாவின் பெற்றோரான காதரும் றைமாவும் மட்டுமே ஓரளவு மனமுதிர்ச்சி கொண்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ரேடியோ சிலோன் கேட்கிற சிறுமியான வஹிதாவுக்கு அவளைப் புரிந்துகொள்ளாத, கவனிக்காத, அவளைவிடப் பதினைந்து வயது மூத்த அவளது அத்தை மகன் சுலைமான் கணவனாகிறான். இவளுக்குச் சிறு ஓசை இருந்தாலும் உறக்கம் வராது. சுலைமான் குறட்டை விடுபவன். இவளது மாமனார் தொட்டுத் தொட்டுப் பேசுகிறவன். அவனைப் பார்த்தால் ஓநாய்போலிருக்கிறது இவளுக்கு. வஹிதா, உறக்கம் வராத இரவு ஒன்றில் முறையற்ற உறவு ஒன்றைப் பார்த்து, அந்தப் பெண்ணைக் கண்டிக்கிறாள். அந்தப் பெண் இவளது தாயைப் பற்றிய இறந்தகால ரகசியம் எதையோ சொல்லி விட்டு அன்றிரவு இறந்து போகிறாள்.

சிறுமி ராபியா தோழியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறாள். அஹமது என்கிற பையனுடன் அவளுக்கு ஈர்ப்பு உண்டாகிறது. அவர்கள் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுகிறார்கள். அந்தப் பையன் தன் நினைவாக ஒரு மரப்பாச்சியைத் தந்துவிட்டு வேறு ஊருக்குப் படிக்கப் போய்விடுகிறான். பிரிவோடும் நினைவுப்பரிசோடும் நாவல் முடிகிறது.

"இரண்டாம் ஜாமங்களின் கதை"யில் தமிழ் முஸ்லிம் குடும்பங்களைக் களமாகக் கொண்டு பெண்களின் பாடுகளும் வலிகளும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ளன. இந்த நாவலை, இந்த நாவலை என்றில்லை எந்த நாவலையும், எந்தக் கலைப் படைப்பையும் சமூக ஆவணமாக மட்டுமே பார்க்கக் கூடாது. சொல்லப்போனால் சமூக ஆவணமாகப் பார்க்கவே கூடாது. எழுதியவர் தனது நாட்குறிப்பேட்டைத் தரவில்லை. சமூக ஆவணங்களின் இயங்கு தளமும் இலக்கியத்தின் இயங்கு தளமும் வெவ்வேறு. வாசகர் ஓர் இலக்கியப் பிரதியைச் சமூக ஆவணமாகப் பார்க்கலாம், பார்க்காதிருக்கலாம். அது வாசகரைச் சார்ந்தது. படைப்பைச் சார்ந்ததல்ல. இலக்கியப் பிரதிக்குச் சமூக ஆவணப் பிரதியைக் காட்டிலும் ஆழமான தளங்களில் செயலாற்றும் திராணியுள்ளதாக நான் நம்புகிறேன்.

இந்தக் கதை 1980களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியப் பெண்கள் அனைவருடைய நிலையும் இப்படித்தான் இருந்தது. குறைந்தபட்சம் பூப்பெய்திய பிறகு பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. இன்னமும் கூடத் தமிழகத்தின் பல்வேறு இனக் குழுக்களிலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எந்தக் கதையையும் ஒரு குறிப்பிட்ட களத்தில்தான் நிகழ்த்த வேண்டியுள்ளது. அந்தக் களம் எழுதுபவருக்குப் பழகிய களமாக இருக்கும்போது கதையை லாவகமாகச் சொல்ல முடிகிறது. ஒரு குறிப்பிட்ட களத்தில் நிகழ்த்தப்படும் கதை அந்தக் களத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. அந்தக் களத்துக்கு மட்டும் தொடர்புடையது என்றால் பிற நாடுகளில் தோன்றிய இலக்கியங்களும் தத்துவங்களும் நமக்கெப்படித் தொடர்புடையனவாக இருக்கும்? இந்தக் கதையைப் படிக்கும்போது 1960களில் கல்வி மறுக்கப்பட்ட ஒரு பெண்ணின் நினைவும் கணவன் வெளிநாட்டிலிருக்க, சில வருடங்களுக்கு முன்புவரை தனது மாமியார் வீட்டில் கிடந்த மற்றொரு பெண்ணின் நினைவும் எனக்கு வந்தது. ஆண்களுக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய, ஓரிரு நாள்களுக்கேனும் உளைச்சல் ஏற்படுத்தக்கூடிய புத்தகம் இது. இந்தப் புத்தகத்தின் 344ஆம் பக்கத்தில் ஷெரீபா என்னும் பெண் அயல் நாட்டிலிருந்த அவளது கணவனுக்கு எழுதியதாக வருகிற கடிதம், மொத்த நாவலின் ஜீவனையும் தன்னிடம் வைத்துள்ளது என்று சொல்லலாம்.

அன்புல்ல மச்சானுக்கு,

அஸ்ஸலமு அலைக்கும். எப்படியிருக்கிறீர்கள். இன்றொடு நிங்கள் எண்ணை விட்டு போய் முப்பத்திரன்டு நாட்களாகிறது. ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு வருசமாவே எனக்கு இருக்கிறது. திணமும் துங்கும் நேரத்திள் முலித்திருந்து உங்கலை நினைத்துக் கொண்டிருப்பேன் ரொம்பவே கஸ்டமாக இருக்கும் அப்பொ வெல்லாம் என் அம்மாவை நிணைத்துக்கொள்வேன் பாவமாக இருக்கும். எப்படிதான் முப்பது வருசம் இப்படி இருந்திருப்பார்கலோ தெரியவிள்ளை. பிள்லைகளை கவனிப்பதிளேயே காலம் ஓடியிருக்கும் நிணைக்க நேரமிள்லாமல் எனக்கும் பிள்லை பிரந்துவிட்டாள் உங்கலை நினைத்து கொண்டிருக்க நேரமிறுக்காதோ என்னமோ. நேட்று இரவு பீரோவைத் திரந்தபோது நம் கல்யாண போட்டா கண்ணிள் பட்டது அதை பாத்ததும் உங்கல் நாபகம் வந்துவிட்டது. நிக்கா முடிந்த நற்பது நாளிளேயே நிங்கள் உருக்கு போய் விட்டது கண் மரந்தார் போல இருக்கிரது உங்கல் முகம். 24 மாதத்திள் ஒரு மாதத்தை பல்லைக்கடித்து ஒட்டியிருக்கிரேன். மீதி 23 மாதத்தை எப்படி ஓட்டப் போகிரேனோ தெரியவிள்லை நினைக்கையிலேயே மளைப்பாக இருக்கிரது. உங்கள் ஒடம்ப கவனியுங்கல். இங்கெ நல்ல சாப்படு சாப்பிடும் போது உங்கல் நாபகம் வந்து விடும். எங்க வீட்டிளும் உங்க வீட்டிளும் அணைவரும் நலம். உரில் விசேசம் எதுவும் இல்லை முடியும்போது போணில் பேசுங்கல். உங்கல் குரலை கேட்டலாவது ஆருதலாக இருக்கும்.

முத்தங்கலுடன்
ஷெரிபா.

இந்த நாவலில் வரும் ஆண்கள் உள்நாட்டில் வியாபாரிகளாகவோ அல்லது பொருளீட்ட அயல்நாடு சென்றவர்களாகவோ இருக்கிறார்கள். பெண்களின் வாழ்வு மற்றவர்களால் முடிவுசெய்யப்படுகிறது. பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிற அந்தரங்க மொழி சில இடங்களில் உபயோகிக்கப்படுகிறது. சில மீறல்கள் பேசப்படுகின்றன. மீறல்கள் எல்லாச் சமுதாயங்களிலும் எல்லா இனக் குழுக்களிலும் இருப்பவையே. சில சமுதாயங்கள் இவற்றைப் பேச அனு மதிப்பதில்லை. அனுமதிக்கப்படாததைப் பேசுகிற துணிவுடையவர்கள் எப்போதும் தோன்றியிருக்கிறார்கள். கண்டனங்களும் அங்கீகாரங்களும் மற்றவர்களைவிட வேகமாக இவர்களை வந்தடைந்திருக்கின்றன. இவை சல்மாவையும் வந்தடையும். இந்தப் புத்தகத்தின் பலமாக, சாதகமான அம்சமாகப் பாசாங்கின்மையையும் இதிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் தோற்றுவாயாக இருந்து மொத்த நாவலிலும் அடி நாதமாக ஒலிக்கிற வலியையும் சொல்ல வேண்டும்.

ஒரு சித்திரத்தின் வெற்றி என்பது ஓவியர் உபயோகிக்காத வண்ணங்களிலும் தீட்டாத தீற்றல்களிலும் உள்ளது என்று சொல்லப்படுவதுண்டு. இந்த நாவல் வலியிலிருந்து தோன்றியிருக்கிறது. எழுத்தாளர் வலியை எழுத முயற்சித்திருக்கிறார். இதனால் நாவல் நீண்டுபோகிறது. இது சல்மாவின் முதல் நாவல். இந்த நாவலின் சாதகமான அம்சமான பாசாங்கின்மையைத் தக்க வைத்துக்கொண்டு, வலியைப் பற்றி எழுதாமல் வலியிலிருந்து மட்டும் அவர் எழுதும்போது தமிழுக்குச் சிறந்த நாவல் ஒன்றை அவரால் தர முடியும்.

இரண்டாம் ஜாமங்களின் கதை - 1
இரண்டாம் ஜாமங்களின் கதை - 2
இரண்டாம் ஜாமங்களின் கதை - 3
இரண்டாம் ஜாமங்களின் கதை - 4
இரண்டாம் ஜாமங்களின் கதை - 5
இரண்டாம் ஜாமங்களின் கதை - 6

Donnerstag, Juli 14, 2005

பத்மநாப ஐயரின் நூலுருவாக்கப் பணிகள்

தமிழியல் வெளியீடுகள்

1. ஊரடங்கு வாழ்வு
(ஈழநாடு பத்திரிகையில் 1984ஆம் ஆண்டு வெளியான
ஆசிரியத் தலையங்கங்கள் 63இன் தொகுப்பு)
ந.சபாரத்தினம்
சென்னை ஜூன்; 1985

2. அக்கரைக்குப்போன அம்மாவுக்கு
(31 கவிதைகளின் தொகுப்பு)
ஹம்சத்வனி
சென்னை ஓகஸ்ட் 1985

3. மரணத்துள் வாழ்வோம்
(31 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகள்)
யாழ்ப்பாணம் நவம்பர் 1985)

4. இந்துப் பண்பாடு: சில சிந்தனைகள்
(லேடி இராமநாதன் நினைவுச் சொற்பொழிவு 1985)
கா.கைலாசநாத குருக்கள்
சென்னை செப்ரெம்பர் 1986

5. யுகங்கள் கணக்கல்ல
(பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பு
கவிதா)
சென்னை நவம்பர் 1986

6. தேடலும் படைப்புலகமும்
(ஓவியர் மாற்கு சிறப்பு நூல்)
யாழ்ப்பாணம் ஓகஸ்ட் 1987

7. இலங்கையின் தோட்டப் பள்ளிக்கூடங்களின்
கல்வியமைப்பும் பிரச்சினைகளும்
சொர்ணவல்லி பத்மநாப ஐயர்
யாழ்ப்பாணம் ஜூன் 1988

8. நீர்வளையங்கள்
(54 கவிதைகளின் தொகுப்பு)
சண்முகம் சிவலிங்கம்
சென்னை நவம்பர் 1988

9. பெண்களின் சுவடுகளில்
சாந்தி சச்சிதானந்தம்
சென்னை மார்ச் 1989

10. யதார்த்தமும் ஆத்மார்த்தமும்
(பத்துக் கட்டுரைகளின் தொகுப்பு)
மு.பொன்னம்பலம்
சென்னை ஏப்ரில் 1991

அலை வெளியீடுகள்

1. மார்க்சியமும் இலக்கியமும்: சில நோக்குகள்
(அலன் ஸ்விஞ்வுட், கேரி சோல் மொர்சன்
றெஜி சிறிவர்த்தனா ஏ.ஜே.கனகரட்ணா
ஆகியோரது நான்கு கட்டுரைகளின் தொகுப்பு)
யாழ்ப்பாணம் ஆவணி 1981

2. ஒரு கோடை விடுமுறை
(நாவல்)
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் ஐப்பசி 1981

3. தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்
வ.ஐ.ச.ஜெயபாலன்
யாழ்ப்பாணம்

4. அகங்களும் முகங்களும்
(32 கவிதைகளின் தொகுப்பு)
சு.வில்வரத்தினம்
யாழ்ப்பாணம் ஆவணி 1985


1) ஐயரின் முயற்சியில் யேசுராசா அவர்களுடன் இணைந்து அலை இன் முதல் 12 இதழ்களும் மறுபதிப்புச் செய்யப்பட்டன.தமிழிதழியல் வரலாற்றில் இதழொன்று மறுபதிப்புச் செய்யப்பட்டது இதுதான் முதற்தடவையாக இருக்கவேண்டும்(தகவல்களின் அடிப்படையில்)

Took initiative and was instrumental in major part of the production of the master copy of

2. Dr P Ragupathy's book: Early Settlements in Jaffna

Assisted in the publication of
3. Lutesong and Lament
Edited by Chelva Kanaganayakam
TSAR Publication,
Canada, 2001.

ஐயரின் முயற்சியால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள்

1. அக்கரை இலக்கியம்
இலங்கை மலேசியா இலக்கியத் தொகுப்பு.
வாசகர் வட்டம், சென்னை. டிசெம்பர் 1968

2. விழிப்புணர்வுபற்றிய விளக்கங்கள்
கந்தையா நவரேந்திரன்
நர்மதா வெளியீடு
சென்னை மார்ச் 1981

3. போர்க்குரல்
லூ சுன் சிறுகதைகள்
தமிழில்: கே.கணேஷ்
பொதுமை வெளியீடு
சென்னை 1981

4. வடமொழி இலக்கிய வரலாறு
கா.கைலாசநாத குருக்கள்
நர்மதா வெளியீடு
சென்னை டிசெம்பர் 1981

5. அழியா நிழல்கள்
(21 கவிதைகளின் தொகுப்பு)
எம்.ஏ.நுஃமான்
நர்மதா வெளியீடு
சென்னை ஒக்ரோபர் 1982

6. தியானம்
(சிறுகதைகள்)
என்.கே.மகாலிங்கம்
பூரணி வெளியீடு
சென்னை ஒக்ரோபர் 1982

7. மஹாகவி கவிதைகள்
அன்னம்
சிவகங்கை

8. மழைநாட்கள் வரும்
(17 கவிதைகளின் தொகுதி)
எம்.ஏ.நுஃமான்
அன்னம்
சிவகங்கை மே 1983

9. இரண்டாவது சூரிய உதயம் (கவிதைகள்)
சேரன்
பொதுமை வெளியீடு
சென்னை ஜூன் 1983

10. சாதாரணங்களும் அசாதாரணங்களும் (சிறுகதைகள்)
குப்பிளான் ஐ.சண்முகன்
நர்மதா வெளியீடு
சென்னை ஒக்ரோபர் 1983

11. நதிக்கரை மூங்கில்
(29 கவிதைகளின் தொகுப்பு)
சி.சிவசேகரம்
காவ்யா
பெங்களுர் டிசெம்பர் 1983

12. பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்
(11 கவிஞர்களின் 55 கவிதைகள்)
க்ரியா
சென்னை ஓகஸ்ட் 1984

13. முற்போக்கு இலக்கியம்
(இலக்கிய விமர்சனம்)
மு.தளையசிங்கம்
க்ரியா
சென்னை ஒக்ரோபர் 1984

14. அறியப்படாதவர்கள் நினைவாக
(கவிதைகள்)
அ.யேசுராசா
க்ரியா
சென்னை நவம்பர் 1984

15. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி
(இலக்கிய விமர்சனம்)
மு.தளையசிங்கம்
க்ரியா
சென்னை டிசெம்பர் 1984

16. புதுயுகம் பிறக்கிறது
(சிறுகதைகள்)
மு.தளையசிங்கம்
சமுதாயப் பிரசுராலயம்
கோயம்புத்தூர் டிசெம்பர் 1984

17. போர்ப்பறை
மு.தளையசிங்கம்
சமுதாயப் பிரசுராலயம்
கோயம்புத்தூர் டிசெம்பர் 1984

18. மெய்யுள்
மு.தளையசிங்கம்
சமுதாயப் பிரசுராலயம்
கோயம்புத்தூர் டிசெம்பர் 1984


19. கலைஞனின் தேடல்
மு.தளையசிங்கம்
சமுதாயப் பிரசுராலயம்
கோயம்புத்தூர் டிசெம்பர் 1984

20. ஒரு தனி வீடு
(நாவல்)
மு.தளையசிங்கம்
சமுதாயப் பிரசுராலயம்
கோயம்புத்தூர் டிசெம்பர் 1984

21. இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்
உதயன் ரூ விஜயன்
மறுமலர்ச்சிக் கழகம்
யாழ்ப்பாணம் மார்ச் 1987

22. தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்
(சிறுகதைகள்)
அ.யேசுராசா
பூரணி வெளியீடு
சென்னை டிசெம்பர் 1989

23. வீடற்றவன்
(நாவல்)
சி.வி.வேலுப்பிள்ளை
மீனாட்சி புத்தகாலயம்
மதுரை


லண்டன் தமிழர் நலன்புரி சங்க ஆண்டுத் தொகுதிகள்
01. 10ஆவது ஆண்டுச் சிறப்பு மலர் (1996)
02. கிழக்கும் மேற்கும் (1997)
03. இன்னுமொரு காலடி (1998)
04. யுகம் மாறும் (1999)
05. கண்ணில் தெரியுது வானம் (2001)



Assisted in the publication of the following issues of Kalam
01 காலம் - சுந்தர ராமசாமி சிறப்பிதழ் - மே 2001
02 காலம் - ஏ.ஜே.கனகரட்ணா சிறப்பிதழ் - ஜூன் 2002
03 காலம் - கே.கணேஷ் சிறப்பிதழ் - ஜனவரி 2003



Project Madurai 13 books posted
1. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு.தளையசிங்கம் - (எண்: 58)
2. அகங்களும் முகங்களும் - சு.வில்வரத்தினம் - (எண்: 65)
3. அழியா நிழல்கள்- எம்.ஏ.நுஃமான் - (எண்: 66)
4. மோகவாசல் - ரஞ்சகுமார் - (எண்: 82)
5. மரணத்துள் வாழ்வோம் (அரசியல் கவிதைகள்) - (எண்: 88)
6. முகம் கொள் - கி.பி.அரவிந்தன் - (எண்: 96)
7. இனி ஒரு வைகறை - கி.பி.அரவிந்தன் - (எண்: 97)
8. கனவின் மீதி - கி.பி.அரவிந்தன் - (எண்: 98)
9. காற்றுவழிக் கிராமம் - சு.வில்வரத்தினம் - (எண்: 99)
10.ஒப்பியல் இலக்கியம்- க.கைலாசபதி - (எண்: 102)
11.அறியப்படதவர்கள் நினைவாக - (எண்: 107)
12. இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியம் - (எண்: 117)
13. காகம் கலைத்த கனவு - சோலைக்கிளி - (எண்: 122)

Quelle - Eelanathan