Dienstag, September 16, 2008
பெண்கள் சந்திப்பு மலர்
மலர் வெளியீடு
பெண்கள் சந்திப்புக்கென [இதழ்கள்மலர்கள்] வெளியிடுவதெனத் தீர்மானிக்கப் பட்டிருந்தாலும் ஒவ்வொரு பெண்கள் சந்திப்பின் போதும் மலர்களை வெளியிடுவது என்பது ஆரம்ப காலங்களில் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. 2008 வரையில் 27பெண்கள் சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும் 27 பெண்கள் சந்திப்பு மலர்கள் வெளியாகவில்லை. இலக்கியத் துறையில் பெண்கள் வெகுவாக ஈடுபட்டிருந்தாலும் குடும்பம், வேலை, குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள்... என்பவைகளைத் தாண்டி வந்து முழுமையான பங்களிப்பைச் செய்யவோ, இது விடயங்களில் அக்கறை காட்டவோ அந்தப் பெண்களால் முடியாமலே இருந்தது. ஆனாலும் காலப்போக்கில் பல தடைகளையும் தாண்டி வந்து தம்மாலான பங்களிப்புகளைப் பல பெண்கள் செய்திருக்கிறார்கள். இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 200, 300 பிரதிகள் அச்சடிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பு மலர் தற்போது 1000 பிரதிகள் வரை அச்சடிக்கப் படுகின்றது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு இப் பெண்கள் சந்திப்பு மலர் இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது குறிப்பிடத் தக்கது.
வெளிவந்த இதழ்கள்
பெண்கள் சந்திப்பு மலர் - 1
பெண்கள் சந்திப்பு மலர் - 2
பெண்கள் சந்திப்பு மலர் - 3
பெண்கள் சந்திப்பு மலர் - 4
பெண்கள் சந்திப்பு மலர் - 5
பெண்கள் சந்திப்பு மலர் - 6 (2001)
பெண்கள் சந்திப்பு மலர் - 7 (2002)
பெண்கள் சந்திப்பு மலர் - 8 (2004)
பெண்கள் சந்திப்பு மலர் - 9 (2005)
பெண்கள் சந்திப்பு மலர் - 6
பெண்கள் சந்திப்பு மலர் 2001
பெண்கள் சந்திப்பு மலர் - 7
மிகுந்த சர்ச்சைக்குள்ளான இம் மலர் 2002 இல் பால்வினைச் சிறப்பிதழாக வெளிவந்தது. 60 பக்கங்களைக் கொண்ட இம்மலரில் முழுமுழுக்க பால்வினை சம்பந்தமான, பால்வினைத் தொழிலாளர்கள் பற்றிய விடயங்களே பேசப்பட்டன. அட்டைப்படமும், உள்ளடக்கமும் பெண்களால் கூட விமர்சிக்கப் பட்டன.
பெண்கள் சந்திப்பு மலர் - 8
பெண்கள் சந்திப்பு மலர் 2004இம்மலர் 39க்கு மேற்பட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புகளுடன் 2004 இல் வெளிவந்தது. வெவ்வேறு கோணங்களிலிருந்து எழுதப்பட்ட பத்தச் சிறுகதைகளும், ஆறு கட்டுரைகளும், 23க்கு மேற்பட்ட கவிதைகளும், ஓவியர் வாசுகியுடனான செவ்வியொன்றும் இதில் இடம் பெற்றுள்ளன. பெண்களின் விடுதலையை, அடக்கப் படுகிறோம் என்று தெரிந்தும் விட்டு வெளியேற முடியாத இயலாமையை. அடைந்து கிடந்தாலும் மனதால் சுதந்திரமாகப் பறக்கத் துணிந்த பெண்களின் தன்மையை, விட்டு விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, இருப்பின் அவசியத்தை, யுத்தத்தின் கோலங்களை, இயற்கையின் சீற்றங்களை... என்று பல விடயங்களை இவை உணர்வோடு பேசுகின்றன.
Sonntag, Mai 11, 2008
வேதா இலங்காதிலகத்தின் 'உணர்வுப் பூக்கள்'!


டென்மார்க் நாட்டின் ஓகுஸ் நகரிலிருந்து வேதா இலங்காதிலகம் அவர்கள் எழுதி, சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் மூலம் அண்மையில் வெளியிட்டுள்ள உணர்வுப் பூக்கள் என்ற தலைப்பிலான கவிதைத் தொகுதியொன்றின் அறிமுகம்
வேதாவின் கவிதைகள் என்ற கவிதைத் தொகுதியினை முதன்முதலில், ஏப்ரல் 2003இல் வழங்கியதன் வாயிலாக இலக்கிய நூல் வெளியீட்டுத்துறையில் தன் காலடிகளைப் பதியவைத்த வேதா இலங்காதிலகம், டென்மார்க்கில் டேனிஷ் மொழியில் குழந்தைகள் இளையோர் சம்பந்தமான பராமரிப்புப் பயிற்சி பெற்றவர். ஐரோப்பிய தமிழ்த் தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது கலை இலக்கியப் படைப்புக்கள் ஏராளமாக வெளியாகியுள்ளன. இன்றும் வெளியாகி வருகின்றன.
இவரது குழந்தைகள் பராமரிப்புப் பயிற்சியின் அனுபவங்களையும், தேடல்களையும் பிரயோகித்து டென்மார்க்கில் டேனிஷ் மொழியில் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்த பல விஞ்ஞான அறிவியல் கட்டுரைகளைத் தேடிப்பெற்று அவற்றில் தேர்ந்தெடுத்த பலவற்றை
தமிழில் மொழிபெயர்த்து புலத்தில் வாழும் நம் தமிழ்க் குழந்தைகள் இளையவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் குழந்தைகள் இளையோர் சிறக்க என்ற தனது இரண்டாவது நூலையும் வேதா இலங்காதிலகம் 2004இல் வெளியிட்டிருந்தார். அது குழந்தைகளுக்கான
நூல் என்பதைவிட அவர்களை வளர்க்கும் பெற்றோர்களுக்குரிய சிந்தனையைத் தூண்டும் நூல் என்று கூறுவதே பொருத்தமாகவிருக்கும்.
உணர்வுப்பூக்கள் என்ற தனது மூன்றாவது நூலை மற்றொரு கவிதைத் தொகுப்பாகத் தனத கணவருடன் இணைந்து இப்போது 2007இல் வழங்கியிருக்கும் வேதா இலங்காதிலகம் அவர்கள் 1976ஆம் ஆண்டிலேயே இலங்கை வானொலியில் தன் முதல் கவிதைக்குக் களம் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1987இல் டென்மார்க்கிற்குப் புலம்பெயர்ந்த பின்னரும் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களின் வாயிலாகவும் தன் கவிதைகளைக் காலத்துக்குக் காலம் இவர் வழங்கிவந்துள்ளார்.
பக்திப் பூக்கள், பெற்றோர் பாசப்பூக்கள், மழலைப் பூக்கள், மழலைப்பாடல் பூக்கள், இயற்கைப் பூக்கள், கதம்ப உணர்வுப் பூக்கள், பெண்மைப் பூக்கள், விண்ணேகியோருக்கு, பொது, என்று ஒன்பது பகுப்புகளில் தனத படைப்புகளையும், பத்தாவது பகுப்பாக
க.இலங்காதிலகத்தின் கவிதைப் பூக்கள் என்ற பகுதியையும் இந்நூலில் உள்ளடக்கி- இந்தப் பத்துப் பிரிவுக்குள்ளும் அண்மைக்காலத்தில் வானொலியிலும், பிற ஊடக நிகழ்வுகளிலும் பாடிய கவிதைகளைத் தொகுத்தும் வகுத்தும் வேதா இலங்காதிலகம் இந்த உணர்வுப்பூக்களில் மணம் பரப்பவைத்துள்ளார்.
இத்தொகுப்பில் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு அம்சம் என்னவென்றால் முதல் ஒன்பது பிரிவுகளுக்குள்ளும் தனது 69 பாடல்களை தொகுத்திருக்கும் வேதா இலங்காதிலகம், பத்தாவது பிரிவுக்குள் தன் கணவர் க.இலங்காதிலகம் எழுதிய 43 கவிதைகளையும் மேலதிகமாக இணைத்திருக்கிறார் என்பதாகும்.
இவரது நூலுக்கு அணிந்துரைகளை இருவர் வழங்கியுள்ளனர். சுவிஸ் - பாசல் நகரிலிருந்து ஏ.ஜேஞானேந்திரனும், ஜேர்மனியிலிருந்து பூவரசு ஆசிரியர் இந்த மகேஷ் அவர்களும் இவ்வணிந்துரைகளை எழுதியுள்ளனர். இவர்கள் இருவரும் கணவர் க.இலங்காதிலகத்தின் 43 படைப்புக்கள் பற்றி ஒரு வரியேனும் எழுதவில்லை. வேதா இலங்காதிலகம் எழுதியுள்ள இரண்டு அறிமுகக் குறிப்புகளில் இரண்டாவதில் கணவரின் படைப்பிலக்கிய அறிமுகம் பற்றி நிறையவே குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு வரியில் பிற்சேர்க்கையாகத் தன் கணவரின் படைப்புக்கள் சேர்க்கப்பட்டமையை அணிந்துரை எழுதியவர்கள் அறிந்திருக்கவில்லை என்ற குறிப்பு வருகின்றது.
அந்தவகையில் உணர்வுப்பூக்களின் இணை ஆசிரியர்களாக திருமதி வேதா இலங்காதிலகமும், திரு. கனகரத்தினம் இலங்காதிலகமும் அமைகின்றனர். தன் கணவரின் கவிதை ஆர்வமே தன்னுள் கவிதைச் சுடர் ஏற்றியது என்று கூறும் வேதா இலங்காதிலகம்
வழங்கியிருக்கும் உணர்வுப் பூக்கள் கவிதைத் தொகுதியின் உள்ளே சற்று நுழைவோம்.
பக்திப்பூக்கள் என்ற முதற்பகுப்பினுள் விநாயகரையும், கண்ணனையும் பாடிப் புகழ்ந்த பின், பெற்றோரையும் குடும்பத்தினரையும் நினைந்துருகும் பெற்றோர் பாசப்பூக்கள் என்ற பிரிவுக்குள் பாவடி புனைய, முதலெழுத்தானவர், இதயத்தில் கொலு, என்னாசை அப்பா, என்ற தலைப்புகளில் தன் தந்தையை நினைத்தும், அம்மா, அனுராகமான பல்லவி அனுபல்லவி, ஆகிய தலைப்புகளில் தன் தாயாரை நினைந்தும் பாடிய பாடல்களுடன், அற்றைப் பிறைநிலவு, சுற்றுலாப்பிரியன் ஆகிய பாடல்களில் தன் பிள்ளைகளுடனும் கவியுறவாடியிருக்கிறார் வேதா.
மழலைப்பூக்கள் என்ற பிரிவுக்குள் குழந்தைகள் பற்றிப்பாடும் வேதா அதனையடுத்த மழலைப்பாடல் பூக்கள் என்ற பிரிவுக்குள் சிறுவர் பாடல்கள் சிலவற்றைச் சேர்த்துள்ளார். இயற்கைப் பூக்கள் என்ற பிரிவுக்குள் நயாகராவையும், உள்ளுர் கடல் அலைகளையும்,
வானத்திலிருந்து விமானத்தின் சாளரத்தினூடு தெரியும் இலங்கையின் கரையோரக் கோடுகளையும் தாம் இயற்கையின் அழகில் தம்மைத் தொலைத்துவிட்ட நேரங்களையும் அழகாகப் பாடிப் பதிவு செய்கின்றார்.
தாயகத்தை விட்டுத் தொலைதூரம் வந்துவிட்ட போதும் காலம் கடந்தும்கூட இன்றுவரை தாயக எண்ணங்களே அவரது கவிதைகளில் பெரும்பாலும் பதிவு செய்யப் படுகின்றன. தாயகத்துக் கிராமத்தின் கனவுகளையும் இவற்றில் பல கவிதைகள் பதிவு செய்கின்றன. தான் புலம்பெயர்ந்து நீண்டகாலம் வாழும் டேனிஷ் மண்பற்றியோ, அதன் மக்கள் பற்றியோ இவரது கவிதைகள் எதுவும் இத்தொகுதியில் பேசப்படவில்லை.
வேதாவின் கவிதைக் களங்கள் எங்கெங்கெல்லாமோ நிலைகொள்கின்றன. இயற்கையையும், ஈழத்தின் நீங்காத நினைவுகளையும் ஏன் மொசப்பத்தேமியாவின் நாகரீக உயர்வையும் மெச்சிப் பாடும் இவர் தீபம் தொலைக்காட்சியில் அன்புள்ள சினேகிதியே என்ற சின்னத் திரைத்தொடரின் 50ஆவது நிகழ்வை அறிந்து அதற்கும் வாழ்த்துக் கவிதை பாடியிருக்கிறார்.
இறுதிப் பிரிவுக்குள் அடங்கியுள்ள திரு. இலங்காதிலகத்தின் கவிதைகள் வகை பிரிக்கப் படவில்லை. அதில் ஒரு கவிதை மலையில் பிறந்த ஆரணங்கே- என்பது. ஈழத்தின் மலையகத்தைப் பாடும் அழகிய இயற்கையோடியைந்த கவிதை இது. 1977இல் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியில் திருமதி இராஜேஸ்வரி சண்முகத்தின் வாசிப்பில் அரங்கேறியுள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்னரே ஆழம் கண்டுள்ள இவரது கவிதை உணர்வினை இப்பொழுதுதான் காணக்கிடைத்திருக்கின்றது. திரு.க.இலங்காதிலகத்தின் கவிதைகளைத் தனியாகத் தொகுத்துத் தனிநூலாக்கியிருக்கலாமே என்ற எண்ணத்தை இத்தொகுப்பின் பின்னிணைப்பில் காணப்படும் 43 கவிதைகளும் ஏற்படுத்தியிருந்தன.
தன் கணவரின் கவிதை ஆர்வமே தன்னுள் கவிதைச் சுடர் ஏற்றியது என்று கூறிய வேதா இலங்காதிலகத்தின் வரிகளின் அர்த்தம் திரு.இலங்காதிலகத்தின் கவிதைகளுள் நுழைந்து வெளிவரும்போது ஆழமாக உறைக்கின்றது. திரு இலங்காதிலகம் எழுதியுள்ள நான் பார்த்த ஈழம் நலமில்லை என்ற கவிதை 2003இல் எழுதப்பட்டுள்ளது. இன்றும் அதன் வரிகள்- நான்காண்டுகள் கடந்த நிலையில் பொருந்துகின்றன. யாழ் நூலக எரிப்பு பற்றிய இவரது கவிதை வஞ்சகனால் எரிந்தது நூலகம் என்ற தலைப்பில் காணப்படுகின்றது. நூலக எரிப்பினால் ஒரு சாமானியனின் மனம் படும் வேதனை அதில் புரிகின்றது.
நூலகம் எரித்த நாள் மே 31 என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் என் கவனத்தை ஈர்த்தது. யாழ்ப்பாண நூலகம் மே மாதம் 31ம் நாள் நள்ளிரவின் பின்னர் எரிக்கப்பட்டது என்பதே வரலாறாகும். அதாவது 1981 ஜுன் 1இன் விடிவுக்கு முந்தைய பொழுது. யாழ்ப்பாண மாநகர மேயராக இருந்த இராஜா விஸ்வநாதன் ஒழுங்குசெய்திருந்த யாழ்ப்பாண நூலக எரிப்பின் முதலாவது நினைவுதினக்கூட்டத்தை நடத்திய வேளையில் உத்தியோகபூர்வமாக யாழ் நூலக எரிப்பினை ஜுன் 1ம் திகதியாகவே குறிப்பிடவேண்டும் என்று அவர் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் வரலாற்றுப் பதிவுகளில் யாழ் நூலக எரிப்பினை ஜுன் 1ம் திகதி என்றே குறிப்பிட்டு வருகின்றோம். திகதிக் குழப்பத்தைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில், எதிர்காலத்தில் இத்திகதியையே நாங்கள் புகலிடப் பதிவுகளிலும் பின்பற்றவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
N.Selvarajah. Prepared for Kalai Kalasam, IBC Tamil 4.1.2008
- இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரித்தானிய நேரம் காலை 07.00 முதல் 10.00 வரை ஒலிபரப்பப்படும் 'காலைக்கலசம்' நிகழ்ச்சியில், 'இலக்கியத் தகவல்
திரட்டு' என்ற பகுதி காலை 7.15 முதல் 8.00மணி வரை சுமார் 15-20 நிமிடங்கள் ஒலிபரப்பாகின்றது. நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வாராந்த நிகழ்ச்சியின் எழுத்துப் பிரதி இதுவாகும். -
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம்
த.பெ.இல: 1447, 7 (ப.எண்.4), தணிகாசலம் சாலை,
தியாகராஜ நகர்,சென்னை - 600 017
ஆசிரியருடன் தொடர்புகளுக்கு: vetha@stofanet.dk
Quelle - Pathivukal
Samstag, Juli 14, 2007
பெயல் மணக்கும் பொழுது

ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள். - பெயல் மணக்கும் பொழுது
- அம்புலி
- அருட்கவிதா
- அனார்
- ஆகர்ஷியா
- ஆதிரா
- ஆதிலட்சுமி சிவகுமார்
- ஆழியாள்
- ஆமிரபாலி
- இளநீதா
- உமையாள்
- உலகமங்கை
- ஊர்வசி
- ஔவை
- கல்யாணி
- கோ.சி.கலைக்கதிர்
- கற்பகம்-யசோதா
- கனிமொழி
- அ.காந்தா
- கிருஷாந்தி ரட்ணராஜா
- குறவஞ்சி
- கோசல்யா சொர்ணலிங்கம்
- சங்கரி
- தே.சங்கீதா
- சத்தியா
- சந்திரவதனா
- சந்திரா இரவீந்திரன்
- சன்மார்க்கா
- சமர்விழி
- சிரச்சீவி
- சிவரமணி
- சுகந்தினி சுதர்சன்
- சுதாமதி
- கே.சுதாஜினி
- சுமதி ரூபன்
- சுல்பிகா
- சூரியநிலா
- செந்தணல்
- செவ்வதனி
- செல்வி
- தமிழவள்
- தயாமதி
- தயாநிதி
- தர்மினி
- தாட்சாயினி
- தானியா
- தில்லை
- துர்க்கா
- தூயவள்
- நவஜோதி
- நளாயினி
- நஜீபா
- நாமகள்
- நிருபா
- நிரோசா
- நிலா
- பர்வின்(நாச்சியார் தீவு)
- பஹீமா ஜஹான்
- பாமதி
- பாமினி
- மேஜர் பாரதி
- பாணுபாரதி
- பிரதீபா தில்லைநாதன்
- பிரியதர்சினி
- மசூறா ஏ.மஜிட்
- மல்லிகா
- மலைமகள்
- மஸாஹிரா பாயிஸ்
- மீரா பாலகணேசன்
- முகைசிரா முகைடீன்
- மைத்ரேயி
- மைதிலி
- யாழ் ஆதிரை
- யாழினி
- யூவியா
- ரங்கா
- ரஞ்சினி
- ரேவதி
- லறீனா ஏ.ஹக்
- வசந்தி-ராஜா
- இ.வசந்தி
- வாசுகி குணரத்தினம்
- காப்டன் வானதி
- விண்ணரசி
- வித்யா
- வினோதினி
- விஜயலட்சுமி சேகர்
- விஜிகலா புவனேந்திரன்
- றஞ்சனி
- ஜமுனா
- சா.ஜெயந்தி
- ஜெயந்தி தளையசிங்கம்
- லுணுகலை ஹஸீனா புஹார்
ஈரக் கசிவை மறந்து தீய்க்கும் நெருக்கடி மிக்க மண்ணில் இருந்து கசிவுகளை உடலிலும் மனத்திலும் செயலிலும் சுமக்கும் பெண்களின் பெயல் இது.
1986 இல் வெளியான "சொல்லாதசேதிகள்" என்னும் கவிதைத்தொகுப்பில் தொடங்கிய ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு பயணதில் இருபது ஆண்டுகளுக்குப்பின் 92 ஈழத்துப் பெண் கவிஞர்களின் ஆக்கங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இணையம் தவிர்த்து அச்சில் வெளியான ஆக்கங்களே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தொகுப்பினை செய்தவர் அ.மங்கை அவர்கள், சென்னயில் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார், ஈழத் தமிழ் இலக்கிய வட்டத்துடன் உயர்வான தொடர்புகளைக் கொண்டிருப்பவர். மற்றைய பலரைப்போல் ஈழத் தமிழ் இலக்கிய வட்டத்துடனான தொடர்புகளை வியாபார நோக்கில் பயன்படுத்துபவர் அல்லர், உணர்வுபூர்வமாக ஒன்றித்து செயலாற்றுபவர்.
தொகுப்பாசிரியர் அ.மங்கை அவர்களின் அறிமுக உரையிலிருந்து சில பகுதிகள்.....
----// இத்தொகுப்பிற்காகத் தேடியலைந்தபோது எழும்பிய கேள்விகள் பல. மாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை கிளப்பும் கவிதைகள், பெண் கவிஞருடையது இல்லை என்பதைத் தெரிந்தபோது என்னுள் எழுந்த ஏமாற்றத்தை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது போனது. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு, இப்படி ஒரு குரல் உண்டு எனத் தெரிந்தபோது, இதுபோன்ற வெளிப்பாடுகளின் தேவை, அவற்றை வெளியிடப் பெண் பெயர் தெரிவு செய்தமை போன்றவற்றை நாம் கட்டுடைக்க வேண்டியது அவசியம் எனப்படுகிறது. ஆண்மை / பெண்மை கட்டமைப்புகளின் பின் தொழிற்படும் ஊகங்களைப் புரிந்து கொள்ள வேண்டியதாகிறது. கோவையில் இருந்து வெளிவந்துள்ள 21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகள் ஆய்வு கட்டுரைத் தொகுப்பில் ப.தமிழரசி என்பவருடைய கட்டுரை முழுக்க முழுக்க மாலிகாவின் கவிதைகளை பெண் கவிஞரின் குரல் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளதைக் காண நேர்ந்தது. இன்னமும்..... என்னுள் தயக்கங்கள் உள்ளன. இத்தொகுப்பில் இடம்பெறும் எவரேனும் ஆண் கவிஞர்களாக இருப்பாரோ என, முடிந்தவரை உறுதி செய்துள்ளேன். வ.ச.ஐ.ஜெயபாலன், ஐங்கரநேசன், சித்ரலேகா, ஆழியாள், சுமதி ரூபன், தெ.மதுசூதனன் ஆகியோர் இதற்குப் பேருதவி செய்தனர். அவர்களது பங்களிப்பின்றி இத்தொகுப்பை நிறைவு செய்வது சிரமமாக இருந்திருக்கும்.
இத்தொகுப்பில் இடம்பெறும் சிலரை நான் நேரில் அறிவேன். பலரை நான் அறிந்ததாக உணர்கிறேன். இன்னும் பலரைச் சந்திக்க ஆவலாக உள்ளேன். இவர்களுக்குள் ஒவ்வொருவரது ஆளுமை, சிந்தனை, அரசியல் தெரிவு ஆகியவற்றில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இத்தொகுப்பில் அனைவரும் ஒரு சேர இருப்பதைக் குறித்து அக்கவிஞர்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வெவ்வேறு அரசியல் சார்பும் சிந்தனையும் கொண்டவர்கள் என்ற வகையில் அது நியாயமானதும் கூட. ஆனால் தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஈழப் பெண் கவிஞர்களுக்கான கவிதைத் தொகுதி என்ற வகையில், அனைத்துத் தரப்பையும் இணைப்பது எனக்கு அவசியமாகப்பட்டது. அதைவிடக் கூடுதலாக வேறுபாடுகளை ஒருங்கே வைப்பது வளமான வாசிப்பிற்கு வழிகோலும் என்று நான் நம்புகிறேன். எனது அடிமன உந்துதலும் படைப்பாளிகளான இப்பெண்களோடு நான் நடத்தும் உரையாடலும் இதுவாகும். இதனை எனது தோழிகள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.
இக்கவிதைகளை நான் எடுத்த தொகுதிகள், இதழ்கள், மலர்கள் குறித்த விவரத்தை ஒவ்வொரு கவிதையோடும் இணைத்துள்ளேன். தொகுதியாக்கத்தில் இடம்பெறவேண்டிய முக்கிய தரவுகள் அவை என்றும் கருதுகிறேன். இதன் மூலம் பெண்கள் என்ற ஒரே அடையாளத்தை மட்டுமின்றி, இப்பெண்களின் சார்புத் தன்மையும் செயல்களமும் வெளிப்படும் எனக் கருதுகிறேன். தரவுகளை ஏற்கனவே வெளிவந்த தொகுப்புகள் தராத காரணத்தால், மூலத்தோடு ஒப்பிடவும், விடுபட்ட / மாற்றப்பட்ட சொற்கள் / வரிகளைக் கண்டறியவும் வாய்பின்றிப் போகின்றது. அடிப்படை அச்சு அறமாக இதைக் கருதிச் செயல்பட வேண்டிய அவசியத்தை, தமிழகத்தில் இன்று வலியுறுத்த வேண்டிய தேவை உள்ளது.
இத்தொகுப்பு முறைமை கூடியவரை அனைத்து தரப்புப் பெண் குரல்களையும் ஒருசேரப் பதிவு செய்வது என்பதாகவே உள்ளது. கவிஞர்களை அகரவரிசையில் வெளியிடுவதன் மூலம் இந்த இருபதாண்டுக் காலச் சூழலுக்குள் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், முரண்கள் போன்றவற்றைக் கொண்டுவர இயலாமல் போனது. இலக்கியத்தின் அழகியல் அளவுகோல், தனிப்பட்ட இரசனை மட்டங்கள் போன்றவற்றை இதுபோன்ற தொகுதிக்குள் கொண்டுவர நான் விரும்பவில்லை. வாழ்வா / சாவா என்ற போராட்டத்தில் , மூச்சுவிடத் திணறும் சூழலில் வெளிவரும் இக்கவிதைகளைக் கூறுபோட்டு, கூவி விற்க நான் தயாராக இல்லை. அதற்கான மனம் என்னிடம் இல்லை.
இவற்றோடு இத்தொகுப்பைப் பற்றி நினைக்கும் போது எனக்குச் சில அச்சங்கள் ஏற்படுகின்றன. இதில் வந்துவிடக்கூடிய தவறுகள் எனது தூக்கத்தைக் குலைக்கின்றன. தயவு செய்து தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அவற்றைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். //----
இக்கவிதைத் தொகுப்பினை சிவ செந்தில்நாதன் தனது மாற்று வெளியீட்டினூடாக பதிப்பித்துள்ளார். நூலின் பிரதிகள் வேண்டுவோர் நேரடியாக சிவ செந்தில்நாதனுடன் தொடர்புகொள்ளலாம்.
தொலைபேசி : +919382853646
இக்கவிதைத் தொகுப்பானது 280 பக்கங்களுடன் டெம்மி அளவு தாளில் நேர்த்தியான கட்டமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய ரூபா 130.00 ஆகும்
Quelle - http://viruba.blogspot.com/2007/06/blog-post.html
