புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை
- கி. அ. சச்சிதானந்தம்
ஓர் அசலான நாவல் தனித்தன்மையோடு இருக்கும்; தனக்கென்று ஒரு முகவரியைக் கொண்டிருக்கும்; அப்போதுதான் அது இலக்கியமாகிறது. மீண்டும் மீண்டும் படிக்கப்படுகிறது. நினைவில் எழுந்து அசைபோட வைக்கிறது. அதைப் பற்றிய வினாக்கள் எழுகின்றன; விடைகள் கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஒரு சமயத்தில், கிடைத்த விடை சரியெனப்படுகிறது, பின்னால் சரியில்லை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட நாவல்தான் ‘மாத்தா ஹரி - புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை.’
இது நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரண்டாவது நாவல். மனித வாழ்க்கையை வரையறுத்துவிடலாம். ஒரு சூத்திரத்தில் சொல்லிவிடலாம் என்பதெல்லாம் அர்த்தமற்றது. சொல்லிவிடலாம் என்பவன் முட்டாள்.
மாத்தா ஹரி - ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை’ புறப்பட்டவள் எங்கு போய்ச் சேர்ந்தாள் என்று குறிப்பிடவில்லை. அவள் போய்ச் சேர்ந்தது பிரெஞ்சு நாட்டுக்கு. புதுச்சேரிக்குத் திரும்பி வராமலே அங்கு கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். கதை என்றால் ‘இட்டுக் கட்டியது’, ‘கற்பனை செய்யப்பட்டது’ என்று பொருள். ஆனால் படிக்கும்போதும் படித்து முடித்துவிட்டபோதும் அப்படி ஓர் உணர்வே தோன்றவில்லை. இந்நாவலை நிதானமாகப் படித்துப் போகவேண்டும். கவனம் சிதறாமல் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் தடுமாற்றம், குழப்பம், என்ன படித்தோம் என்று பின்னோக்கி படித்த பக்கங்களைப் புரட்டவேண்டும். அப்படி நாவலின் சொல்லாடல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா கதைமாந்தர்களும் தன்மையிலும் படர்க்கையிலும் பேசுகிறார்கள். முக்காலமும் அதன் நேர் வரிசையில் வராமல் நிகழ்காலச் சம்பவங்கள் இறந்தகாலத்திலும், இறந்தகாலச் சம்பவங்கள் நிகழ்காலத்திலுமாக நாவலில் எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வப்போது ஆசிரியர் வந்துவிடுவார். அவர் வருவதற்கும் காரணம் இருக்கிறது. இந்தப் புதுச்சேரிப் பெண்ணான பவானியை ஆசிரியருக்குத் தெரியும் என்பதனால்.
இந்த நாவலின் தொடக்கம், பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படமான ‘மகாத்மா காந்தி’ நினைவுக்கு வந்தது. இத்திரைப்படத்தின் முதற்காட்சியே மகாத்மா காந்தி சுடப்படுகிறார். காது செவிடுபட பின்னணி சப்தம். இப்படம் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிப்பதாகும். காந்தி வாழ்க்கையைக் காட்டிவிட்டுத்தானே இறுதியாக அவர் இறப்பைக் காட்டி படத்தை முடித்திருக்கவேண்டும். மாறாக, இறப்பை முதலில் காட்டிவிட்டு வாழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறதே. திரைப்படம் என்பதனால் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளலாமா என்று எழும் வினா தர்க்கரீதியானதுதான். சிந்தித்துப் பார்த்தபோது காந்தி இறந்துவிட்டார்; ஆனாலும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதைக் காட்டவேதான் அந்த உத்தி கையாளப்பட்டதாக உணர்ந்தேன். இது படைப்புச் சுதந்திரம்; இதுதான் கலை.
இந்நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண் பவானியின் வாழ்க்கை. அவளின் மரணம் நாவலின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்படுகிறது. ‘ஸ்ட்ராஸ்பூர் நகரின் மத்திய கல்லறையில் அவள் இருப்பிடம் (பக். 19) ஒன்று, இரண்டு, மூன்றாவதாக இருந்த கல்லறையில், பவானி தேவசகாயம் பிறப்பு 27. 06. 1959, இறப்பு 10. 02. 1992’ (பக். 20).
ஹரிணி தன் தாய் பவானி தேவசகாயத்தின் மரணம் தற்கொலையா அல்லது இயற்கையாக சம்பவித்ததா என்பதைக் கண்டறிய அவளுடைய வாழ்வில் குறுக்கிட்டவர்களைச் சந்திப்பதால் கிடைக்கும் தகவல்களேதான் இந்த நாவல். பவானி வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவர்கள்: பத்மா, தேவசகாயம் - இவர்கள் தமிழ் பிரான்சு குடிமக்கள், எலிசபெத், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ பிரான்சு நாட்டு வெள்ளைக்காரர்கள்.
ஹரிணி தன் பெற்றோர்களான தாய் பவானி, தந்தை தேவசகாயம் ஆகியோருடன் குழந்தையாக இருக்கும்போது பிரான்சு நாட்டுக்கு வருகிறாள். பவானி இறந்துவிடுகிறாள்; தேவசகாயம் போதைப்பொருள் விற்றதற்காகச் சிறையிலடைக்கப்படுகிறான். ‘எல்லா அனாதைக் குழந்தைகளையும் போலவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் மாவட்ட நிர்வாகம் பவானி தேவசகாயத்தின் மகள் ஹரிணியை வளர்க்கும் பொறுப்பையும் ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. அதற்கான உதவித்தொகையையும் கொடுத்து வந்தது.’ (பக். 22). ஒரு கம்பெனியில் வேலை செய்யும் இளம் பெண்ணாக, சுதந்திரம் உள்ளவளாக, தனியாக வாழ்பவளாக அறிமுகமாகிறாள். ‘நேற்று மாலை நிர்வாக இயக்குநரான இளைஞன் சிரிலோடு பாதுகாப்பு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் உறவு’ கொண்டது. (பக். 23).
இந்நாவல் கதாமாந்தர்களின் செயல்பாடுகள், எண்ணங்கள், நடத்தைகள், நோக்கங்கள், காலவரிசைப்படி சொல்லப்படாமல், முன்னும் பின்னுமாகத் தாவித் தாவி, பாய்ச்சலோடு போகின்றன. அதாவது இறந்த காலத்தின் சம்பவங்கள் முன்னதாகவும், நிகழ்காலச் சம்பவங்கள் பின்னதாகவும் சொல்லாடல் நிகழ்கின்றது; இடையிடையே ஆசிரியரின் குரல் கேட்கிறது. எண்ணங்கள் தூலப் பொருள்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. புறத்திலுள்ள தூலப் பொருளா, மன ஓட்டங்களா? (எ. கா. பக். 44-45)
பவானியின் கதைதான் இந்நாவல். அவள் யார்? பிரெஞ்சுக்காரியான எலிசபெத் முல்லெர் சொல்கிறாள் ‘மயக்கமடையாத குறை. அப்படியொரு அழகுப் பெண்மணியை என் வாழ்நாளில் அதற்கு முன்பு சந்தித்ததில்லை. அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் சரி, அன்றைக்கு அக்கட்டடத்தில் வேறுபணியில் இருந்த மற்ற ஊழியர்களும் சரி சிலையாகச் சமைந்து போனார்கள். வாளிப்பான உடல், பட்டினைப் போன்ற முகம், நாசி துவாரங்களை ஒளித்த மூக்கு, உலர்ந்திராத சிவந்த உதடுகள், இடையில் நிழலாடும் வெண்பற்களின் உதவியோடு உதடுகள், சிரிக்க முயல்வது போன்ற பாவனை, வெல்வெட் போல இரண்டு விழிகள். தீப்பொறி போல கண்மணிகள். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியதுபோல, தலை முதல் இடைவரை நீண்டிருந்த கூந்தல்.’ (பக். 27).
பவானியை புதுச்சேரியில் வழக்குரைஞராக அறிமுகமாகிறோம். அவள் சிந்தனை ‘பெண் என்பவள் பிறர் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை எனவே இதற்கு என்னால் உடன்பட முடியாது.’ (பக். 44). தேவசகாயம்தான் பவானியைத் தன்னை திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறான். கெஞ்சுகிறான். அப்போது அவள் மனம் குழம்புகிறது, மூளையைக் கசக்கிப் பிழியும் கேள்விகள், சிந்தனை ஓட்டங்கள் இவையெல்லாமே அவள் திருமணம் செய்யமாட்டாள் என்ற முடிவையே சுட்டிக் காட்டுகின்றன. அவள் பாட்டியின் தீடிரென்று சம்பவித்த மரணம் திருமணத்திற்குக் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் அவள் சின்னக் குழந்தையாகவே இருந்தபோது அவள் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டாள். ஏன் என்றால் அவளுக்கு மீண்டும் சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் பெற வேண்டுமென்று ஆசை. ஓடிப்போனவளை நினைத்து வருந்திய அவளது தகப்பனும் செத்துப் போய்விடுகிறாள். ஆக அவளுக்கு இந்த உலகத்தில் ஆதரவாக இருந்தது அவள் தந்தைவழிப் பாட்டி. பாட்டி உயிரோடு இருக்கும் வரை பவானி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தன் கவலையை வெளியிட்டுக்கொண்டிருந்தாள். அவளும் இறந்துவிட்ட பிறகு? அதனால்தான் என்னவோ தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டாள். ஆக அறிவுபூர்வமாக வாழ்க்கை போவதில்லை... அவள் தேவசகாயத்தைத் திருமணம் செய்யாமல் இருந்தால் நாவலே இல்லை! பவானி திருமணம், பிரெஞ்சு நாட்டில் அவள் வாழ்க்கை எல்லாம் ஊழ்வினையா? வாழ்க்கையை அறிவுபூர்வமாகச் சிந்தித்த பவானி தன் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டாள். தலைவிதி இல்லாமல் என்ன?
தேவசகாயம் எப்படிப்பட்டவன்? ‘அவனால பத்துப் பெண்களுக்குத் தாலி கட்டவும், நூறு பிள்ளைகளைப் பெத்துக்கவும் முடியும். என்னுடைய தகப்பனாரைவிட அவனுடைய தகப்பனாருக்கு இருக்கிற சொத்தும் அதிகம், வாங்கற பென்ஷனும் அதிகம். அவன் கவிதைகள் எழுதுவான். அவன் கொஞ்சம் வித்தியாசமானவன். ஒரு சமயம் ரஜினி படத்தை முதல் நாளே பார்க்கணும் என்பான். இன்னொரு சமயம் மார்க்கோ, •பெரேரி என்ற இத்தாலிய இயக்குநரின் படங்கள் பாத்திருக்கிறாயா என்பான். தனது பிறந்த நாளைக்கு ஒரு பெரிய ஓட்டலில் எங்களுக்கு டின்னர் கொடுத்துட்டு, மறுநாள் மடத்துக்குச் சென்று அநாதைப் பிள்ளைகளோட சாப்பிடப் போறேன் என்பான்.’ (பக். 59).
தேவா சின்னப் பையனாக இருந்தபோது, அவரின் தந்தையார் தெருவில் மாம்பழம், வெள்ளரிப்பிஞ்சு கூவி விற்பவளைக் கூட்டி வைத்துக்கொள்கிறார். அவளைத் தன் தாயாக தேவாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பக். 117) இவனுக்கு கஞ்சா என்ற மரியுவானா பழக்கம் ஏற்பட்டது. ‘பௌர்ணமி இரவொன்றில், திருவக்கரை வக்கிரகாளியைத் தரிசிக்கச் சென்ற இடத்தில் சாது ஒருவர், ‘அம்மனைச் சாந்த சொரூபியாக இவனுள் காண உதவும் ‘ஒளடதம்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். நாளொன்றுக்கு இரண்டு முறை இம்மருந்தை எடுத்துக்கொண்டால், குறைந்தது 150 ஆண்டுகள் உயிர்வாழலாமென உத்திரவாதம் செய்கிறார்.’ (பக். 120) விளைவு? ‘சகல புவனங்களையும் மயக்கும் மோகினியாக இவனுள் வக்கிரகாளி அம்மன்... மாத்தா ஹரி... ம். இல்லை. பவானி’. (பக். 121).
தேவசகாயம் காளி உபாசகன் என்று சொல்லக் கேள்வி. புதுச்சேரியில் இருக்கிறபோது அடிக்கடி திருவக்கரைக்குச் சென்று வருவானாம். பழம் பூவென்று வீடு முழுக்க நிறைந்துவிடும். நாக்கைத் திருத்திக்கொண்டு, கண்களை விரியத் திறந்தபடி பக்கத்திற்கு ஒன்பது கைகளென்று, கபால மாலையணிந்த காளி. முகம் மட்டுமல்ல, கரிய அந்த உடலிலும் உக்கிரத்தைப் பார்க்கலாம். அதனருகிலேயே மாலை சாற்றிய மாத்தா ஹரியின் முழு உருவப்படம். விடிய விடிய பூஜை நடக்கும். கட்டி கட்டியாய் கற்பூரத்தை எரிப்பார்கள். கத்தை கத்தையாய் ஊதுபத்தி கொளுத்துவார்கள்.’ (பக். 189).
ஆக, தேவசகாயம் பவானியின் அழகிற்காக அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவளிடம் மாத்தா ஹரியைக் காண்கிறான். பவானியைப் புணரும்போது தன் மனைவியாகவும், அதே சமயத்தில் வணங்கும் தாயாக மாத்தா ஹரியாகப் பார்க்கிறான். தேவசகாயம் ஒருவித மனநோயாளியா என்ன? பணக்காரனான தேவசகாயம் பவானியிடம் அப்படி மன்றாடி மண்டியிட்டு மணம் புரிந்துள்ளான். ஏன் கெஞ்ச வேண்டும்? “தேவா, பல முறை சொல்லிவிட்டேன். நான் மாத்தா ஹரி இல்லை. பவானி... பவானி... பவானி.” “உனக்கு பவானி, எனக்கு மாத்தா ஹரி.” காலில் விழுகிறான். மீண்டும் மீண்டும் பித்துப்பிடித்தவன் போல என் கால்களில் விழுகிறான். (பக். 88).
மாத்தா ஹரி யார்? 1917 ஆண்டில் தன் அழகான உடலை வைத்துக்கொண்டு செருமானிய நாட்டுக்கு உளவு வேலை செய்தாள் என்று பிரான்சுக்காக தூக்கிலிடப்பட்டாள். அவளைப் பற்றி ஏராளமான புத்தகங்களும், வந்திருக்கின்றன. அவள் வாழ்க்கை பற்றி விரிவான குறிப்புகள். (பக். 28லிருந்து 33; பக். 80-81) மாத்தா ஹரிக்கு என்று ஒரு சமயக்குழு அதாவது ‘கல்ட்’ உருவாகியிருக்கிறது. (பக். 176 -178).
எலிசபெத் முல்லர், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ ஆகியவர்கள் இந்த கல்ட்டுடன் சம்பந்தமுள்ளவர்கள்.
‘குளோது அத்ரியன் பிரெஞ்சுக்காரன். வயது அறுபது. ஹிப்பி, நியூடிஸ்ட், எக்கொலொஜிஸ்ட், மரணதண்டனைக்கு எதிரி. கடைசியில் மாத்தா ஹரியின் பரம ரசிகர்.
அவரது அறையின் நான்கு சுவர்களிலும் நீங்கள் பார்ப்பது அனைத்துமே மாத்தா ஹரியின் படங்கள் தாம். குழந்தையாக, விடலைப் பெண்ணாக, வாலைக்குமரியாக, தேவதையாக, குற்றவாளியாக சுவரெங்கும் மாத்தா ஹரி அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள்’. (பக். 136) பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்திலுள்ள மாத்த ஹரியின் மண்டையோடு காணாமல் போய்விடுகிறது.
இந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரோ திருடியிருக்கிறார்கள்.‘குளோது பிஞ்சிலேயே பழுத்தார். போதைப் பழக்கம் அதன் தேவைக்காக சின்னச் சின்னத் திருட்டுகள். எழுபதுகளில் ஹிப்பி இயக்கத்தில் சேர்ந்து கோவாவில் முழுநிர்வாண வாழ்க்கையை விரும்பும் கூட்டத்துடன் சேர்மானம்... ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார்.’ (பக். 138).
பவானி வாழ்க்கைக்கும், மாத்தா ஹரி வாழ்க்கைக்கும் பொதுவான, ஒற்றுமை அம்சங்கள் இல்லை. ஆனால் மாத்தா ஹரி சமயக் குழுவிலிருப்பவர்களினால் பவானி வாழ்க்கை பாதிக்கப்பட்டது அவ்வளவுதான்.
இந்நாவலின் களம் புதுச்சேரியிலும், பிரான்சு நாட்டிலும் இடம் பெறுகிறது.
புதுச்சேரி வாழ் தமிழ் பிரெஞ்சு குடிமக்கள் வாழ்க்கை துவக்கமாக வெளிப்படுகிறது. ‘பத்மாவிற்குப் பிறந்த நாள். பகல் விருந்தில் கோழி, ஆடு, ஐஸ்கிரீம் என அனைத்தும் இருந்தன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பணம். அவள் தகப்பன், பிரெஞ்சு ராணுவத்தில் துப்பாக்கி பிடித்த நேரத்தைக் காட்டிலும் வெள்ளைத்தோல் கேப்டனுக்கு பிரியாணி செய்துபோட்ட நேரங்களும், கால், கை பிடித்த நேரங்களும் அதிகம். பதினைந்து ஆண்டுகள் தெரிந்த இரண்டொரு பிரெஞ்சு வார்த்தைகளோடு பிரான்சில் தள்ளிவிட்டு புதுச்சேரியில் வீடு, கார் என்று வாங்கி வைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளின் வயிற்றெரிச்சல்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்’ (பக். 42-43) ‘நம்ம பாண்டிச்சேரிக்காரங்களைப் பத்தித் தெரியுமே. சிலர் ஒழுங்காகவும் இருக்கலாம். அவங்களைச் சொல்லலை. ஆனால் நிறைய பேர், ஒருத்தன் மாத்தி ஒருத்தன், அடுத்தவங்க வீட்டுக்குப் போறதே தன் வீட்டிலே குடிச்சது போதாதுன்னு அங்கேயும் விஸ்கி பாட்டிலைத் திறந்து வச்சுக்கணும் என்பதற்காக. வந்தவுடனேயே ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் குசினிக்குள் இருப்போம். பிரெஞ்சு ராணுவத்துல பணிபுரிந்திருப்பார்கள், அவர்களை ராணுவ வீரர்கள் என்பதைவிட எடுபிடிகள்னு சொல்லலாம். துப்பாக்கியைத் தொட்டுப் பார்க்காதவன்கூட, தான் இல்லையென்றால் பிரெஞ்சு ராணுவமே இல்லையென்பதுபோலப் பேசுவான். பிறகு எம்.ஜி.ஆர் என்பான். சிவாஜி என்பான். வேறு ஒரு மசுறும் தெரியாது. விடிய விடிய குடிப்பார்கள். பெண்களாகிய நாங்கள் மீனையும் கறியையும் வறுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த தட்டை நிரப்பவேண்டும். ’
நாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது. (எடுத்துக்காட்டாக பார்க்க பக். 46-50, பவானியின் குழந்தை பற்றியும் அவனின் தந்தையைப் பற்றிய அத்தியாயம் 7ல்.)
ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.
நூல்: மாத்தா ஹரி - புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை
ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா
பக்கங்கள்: 288
விலை: ரூ. 150
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
102, பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ்,
57, தெற்கு உஸ்மான் சாலை,
தி. நகர்,
சென்னை - 17.
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen