1980களின் முற்பகுதியில் ஐந்தாறு தமிழ் முஸ்லிம் குடும்பங்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே பேசுகிற புத்தகம் "இரண்டாம் ஜாமங்களின் கதை". ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத் தொகுப்பின் மூலமாக கவனம் பெற்ற முக்கியக் கவிஞர் சல்மாவின் முதல் நாவல் இது.
இரண்டாம் ஜாமங்களின் கதைக்கான மதிப்புரை
- குவளைக் கண்ணன் -
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை,
நாகர்கோவில் - 629 001.
முதல் பதிப்பு - டிசம்பர் 2004
பக். 520, ரூ. 250/-
1980களின் முற்பகுதியில் ஐந்தாறு தமிழ் முஸ்லிம் குடும்பங்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே பேசுகிற புத்தகம் "இரண்டாம் ஜாமங்களின் கதை". ஒரு ரம்ஜான் நோன்புக் காலத்துக்கு முன்னர் தொடங்குகிற நாவல் அடுத்த ரம்ஜான் நோன்பு வருவதற்குள் முடிந்துவிடுகிறது. நாவலின் பெரும்பகுதியும் ராபியா என்னும் சிறுமியின் வாயிலாகவும் அவளைவிட நான்கைந்து வயது மூத்தவளாக இருக்கக்கூடிய அவளது அக்காவான (பெரியப்பா மகள்) வஹிதா என்னும் சிறுமியின் வாயிலாகவும் சொல்லப்படுகிறது. கதையில் காதர், கரீம், சையது, சிக்கந்தர், சுலைமான், பஷீர் என்னும் ஆண்கள் வருகிறார்கள். எந்த ஆணுடைய சித்திரத்துக்கும் ஓரிரு தீற்றலுக்கும் கூடுதலாகக் கவனம் கிடைப்பதில்லை. அவர்கள் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அறியப்படாத வாழ்வுமுறையைக் களமாகக் கொண்டு அறியப்படாத பெண் கதாபாத்திரங்கள் மூலம் பெண்ணின் நிலையை, பெண்ணின் பாடுகளைப் பேசுகிற புத்தகம் இது.
எழுத்து வகைகள் மகிழ்ச்சியைப் பேசுவதைவிட, அநேகமாகத் துன்பத்தையும் வலியையும் பேசும்போதே கூடுதல் கலைத்தன்மை கொண்டவையாக அமைகின்றன. சாதாரணமாக நாம் இந்தத் துன்பத்தையும் வலியையும் மகிழ்ச்சிக்கும் சுகத்துக்குமான எதிர்நிலையாகவே காண்கிறோம். சாதாரணமாக என்னும் சொல்லை இலக்கியத்திற்கு உபயோகிக்க முடியுமா? இலக்கியம் நமது மனத்தின் ஆழ்தளங்களில் இயங்குகிறது, புழுக்கத்திலுள்ள மனத் தளங்களில் இயங்குவதில்லை. நாம் நடைமுறையில் பார்க்கக் கூடிய மாற்றங்கள் ஆழங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற மாற்றங்களின் சிறு அறிகுறிகளே. வலி என்னும்போது தலைவலிபோல் உடனடி நிவாரணம் கிடைத்துவிடக் கூடிய வலியல்ல. ஒரு வகையில் ஓரிரு நிமிடங்களில் நிகழக்கூடிய பிள்ளைப் பேறுக்காக ஒன்பது மாதங்கள் சுமக்கிற வலியைச் சொல்லலாம். நீண்டகாலக் கெடுவுள்ள வலி என்பதற்காகவும் புதியதற்குப் பிறப்பளித்தல் இதில் உள்ளதாலும் மட்டுமே இதுவும்கூட ஒரு வசதிக்காக இங்கே சொல்லப்படுகிறது.
வலியை அசௌகரியத்தோடும் நிராசையோடும் தொடர்புபடுத்திப் பழகிவிட்டோ ம். வலியைத் தன்னுடையதேயாகக் கருதிக்கொண்டு சில குறிப்பிட்ட சம்பவங்களாலும் காரணங்களாலும் சில குறிப்பிட்ட நபர்களாலும் ஏற்படுவதாகக் கருதிக் கசந்துபோகிறோம். கசப்பைப் பரவ விடுகிறோம். இது பண்படாத, ஆழமற்ற, மேல் மனத்தில் ஏற்படுவது. இதுவும் ஓர் அறிகுறி மட்டுமே. ஆழ்மனத்தில் ஏற்படுகிற மாற்றங்களின் வலி, அந்தக் கட்டத்தின் ஏதோவொரு நடவடிக்கையால் ஏற்படுகிற அசௌகரியத்தால் தனிப்பட்ட வலியாக நம்மால் உணரப்படுகிறது.
இந்தக் கதையில் வரும் ஆண்களில் அப்துல், பஷீர் என்னும் இரண்டு ஆண்கள் சற்றுச் சாதகமான சித்தரிப்பைப் பெறுகின்றனர். இதில் அப்துல் இறந்துபோனவர். பஷீர் ஐந்நூறு பக்க நாவலில் ஒன்றே முக்கால் பக்கங்களுக்கு வருகிறார். கரீம் என்பவர் வேற்று இனப் பெண்ணுடன் தொடர்புவைத்துள்ளார். கணவனைப் பிரிந்து வந்த இரண்டு பெண்கள் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் இருவேறு தலைமுறையைச் சார்ந்தவர்கள். இதில் முந்தைய தலைமுறைப் பெண்ணின் தொடர்பு தெரிவதில்லை, மற்ற பெண் வேற்று இன ஆணோடு தொடர்புகொள்கிறார். இருவருமே துர்மரணம் அடைகிறார்கள். வேறொரு பெண் கணவனோடும் இரண்டு ஆண் குழந்தைகளோடும் உள்ளவள் தனது இனத்து ஆணோடு தொடர்புவைத்திருக்கிறாள். இவள் இறக்கவில்லை. ஓர் ஏழைப்பெண் வேற்று இன ஆணைத் திருமணம் செய்து கொள்கிறாள். இவளும் துர்மரணம் அடைகிறாள்.
நாவலின் தொடக்கத்தில் துக்க வீட்டுக்குத் தன்னுடன் அழைத்துப் போகிற தனது மகளிடம் பதற்ற முற்றுத் தாவணி அணிய வைக்கிறாள் அவளது தாய். அந்தச் சிறுமி ஐந்தாவதோ ஆறாவதோ படிப்பவள். மும்தாஜின் கணவன் வெளிநாட்டில் வேலையிலிருப்பவன், இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வந்து போகிறவன், இந்தத் துடிப்பான பெண்ணுக்குத் தனது கருப்பை வளர்ச்சி அடையவில்லை என்று தெரிந்ததும் இசிவுநோய் (லீஹ்stமீக்ஷீவீணீ) வந்துவிடுகிறது. அவள் தாய்வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அவளது கணவனுக்கு வேறொரு திருமணம் செய்துவைக்கப்படுகிறது. ராபியாவின் வேற்று இனத் தோழி ஒருத்தியின் தாய்க்கு இரண்டு கணவர்கள் இருப்பதாகக் காட்டப்படுகிறது. வஹிதாவின் பெற்றோரான காதரும் றைமாவும் மட்டுமே ஓரளவு மனமுதிர்ச்சி கொண்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
ரேடியோ சிலோன் கேட்கிற சிறுமியான வஹிதாவுக்கு அவளைப் புரிந்துகொள்ளாத, கவனிக்காத, அவளைவிடப் பதினைந்து வயது மூத்த அவளது அத்தை மகன் சுலைமான் கணவனாகிறான். இவளுக்குச் சிறு ஓசை இருந்தாலும் உறக்கம் வராது. சுலைமான் குறட்டை விடுபவன். இவளது மாமனார் தொட்டுத் தொட்டுப் பேசுகிறவன். அவனைப் பார்த்தால் ஓநாய்போலிருக்கிறது இவளுக்கு. வஹிதா, உறக்கம் வராத இரவு ஒன்றில் முறையற்ற உறவு ஒன்றைப் பார்த்து, அந்தப் பெண்ணைக் கண்டிக்கிறாள். அந்தப் பெண் இவளது தாயைப் பற்றிய இறந்தகால ரகசியம் எதையோ சொல்லி விட்டு அன்றிரவு இறந்து போகிறாள்.
சிறுமி ராபியா தோழியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறாள். அஹமது என்கிற பையனுடன் அவளுக்கு ஈர்ப்பு உண்டாகிறது. அவர்கள் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுகிறார்கள். அந்தப் பையன் தன் நினைவாக ஒரு மரப்பாச்சியைத் தந்துவிட்டு வேறு ஊருக்குப் படிக்கப் போய்விடுகிறான். பிரிவோடும் நினைவுப்பரிசோடும் நாவல் முடிகிறது.
"இரண்டாம் ஜாமங்களின் கதை"யில் தமிழ் முஸ்லிம் குடும்பங்களைக் களமாகக் கொண்டு பெண்களின் பாடுகளும் வலிகளும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ளன. இந்த நாவலை, இந்த நாவலை என்றில்லை எந்த நாவலையும், எந்தக் கலைப் படைப்பையும் சமூக ஆவணமாக மட்டுமே பார்க்கக் கூடாது. சொல்லப்போனால் சமூக ஆவணமாகப் பார்க்கவே கூடாது. எழுதியவர் தனது நாட்குறிப்பேட்டைத் தரவில்லை. சமூக ஆவணங்களின் இயங்கு தளமும் இலக்கியத்தின் இயங்கு தளமும் வெவ்வேறு. வாசகர் ஓர் இலக்கியப் பிரதியைச் சமூக ஆவணமாகப் பார்க்கலாம், பார்க்காதிருக்கலாம். அது வாசகரைச் சார்ந்தது. படைப்பைச் சார்ந்ததல்ல. இலக்கியப் பிரதிக்குச் சமூக ஆவணப் பிரதியைக் காட்டிலும் ஆழமான தளங்களில் செயலாற்றும் திராணியுள்ளதாக நான் நம்புகிறேன்.
இந்தக் கதை 1980களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியப் பெண்கள் அனைவருடைய நிலையும் இப்படித்தான் இருந்தது. குறைந்தபட்சம் பூப்பெய்திய பிறகு பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. இன்னமும் கூடத் தமிழகத்தின் பல்வேறு இனக் குழுக்களிலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எந்தக் கதையையும் ஒரு குறிப்பிட்ட களத்தில்தான் நிகழ்த்த வேண்டியுள்ளது. அந்தக் களம் எழுதுபவருக்குப் பழகிய களமாக இருக்கும்போது கதையை லாவகமாகச் சொல்ல முடிகிறது. ஒரு குறிப்பிட்ட களத்தில் நிகழ்த்தப்படும் கதை அந்தக் களத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. அந்தக் களத்துக்கு மட்டும் தொடர்புடையது என்றால் பிற நாடுகளில் தோன்றிய இலக்கியங்களும் தத்துவங்களும் நமக்கெப்படித் தொடர்புடையனவாக இருக்கும்? இந்தக் கதையைப் படிக்கும்போது 1960களில் கல்வி மறுக்கப்பட்ட ஒரு பெண்ணின் நினைவும் கணவன் வெளிநாட்டிலிருக்க, சில வருடங்களுக்கு முன்புவரை தனது மாமியார் வீட்டில் கிடந்த மற்றொரு பெண்ணின் நினைவும் எனக்கு வந்தது. ஆண்களுக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய, ஓரிரு நாள்களுக்கேனும் உளைச்சல் ஏற்படுத்தக்கூடிய புத்தகம் இது. இந்தப் புத்தகத்தின் 344ஆம் பக்கத்தில் ஷெரீபா என்னும் பெண் அயல் நாட்டிலிருந்த அவளது கணவனுக்கு எழுதியதாக வருகிற கடிதம், மொத்த நாவலின் ஜீவனையும் தன்னிடம் வைத்துள்ளது என்று சொல்லலாம்.
அன்புல்ல மச்சானுக்கு,
அஸ்ஸலமு அலைக்கும். எப்படியிருக்கிறீர்கள். இன்றொடு நிங்கள் எண்ணை விட்டு போய் முப்பத்திரன்டு நாட்களாகிறது. ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு வருசமாவே எனக்கு இருக்கிறது. திணமும் துங்கும் நேரத்திள் முலித்திருந்து உங்கலை நினைத்துக் கொண்டிருப்பேன் ரொம்பவே கஸ்டமாக இருக்கும் அப்பொ வெல்லாம் என் அம்மாவை நிணைத்துக்கொள்வேன் பாவமாக இருக்கும். எப்படிதான் முப்பது வருசம் இப்படி இருந்திருப்பார்கலோ தெரியவிள்ளை. பிள்லைகளை கவனிப்பதிளேயே காலம் ஓடியிருக்கும் நிணைக்க நேரமிள்லாமல் எனக்கும் பிள்லை பிரந்துவிட்டாள் உங்கலை நினைத்து கொண்டிருக்க நேரமிறுக்காதோ என்னமோ. நேட்று இரவு பீரோவைத் திரந்தபோது நம் கல்யாண போட்டா கண்ணிள் பட்டது அதை பாத்ததும் உங்கல் நாபகம் வந்துவிட்டது. நிக்கா முடிந்த நற்பது நாளிளேயே நிங்கள் உருக்கு போய் விட்டது கண் மரந்தார் போல இருக்கிரது உங்கல் முகம். 24 மாதத்திள் ஒரு மாதத்தை பல்லைக்கடித்து ஒட்டியிருக்கிரேன். மீதி 23 மாதத்தை எப்படி ஓட்டப் போகிரேனோ தெரியவிள்லை நினைக்கையிலேயே மளைப்பாக இருக்கிரது. உங்கள் ஒடம்ப கவனியுங்கல். இங்கெ நல்ல சாப்படு சாப்பிடும் போது உங்கல் நாபகம் வந்து விடும். எங்க வீட்டிளும் உங்க வீட்டிளும் அணைவரும் நலம். உரில் விசேசம் எதுவும் இல்லை முடியும்போது போணில் பேசுங்கல். உங்கல் குரலை கேட்டலாவது ஆருதலாக இருக்கும்.
முத்தங்கலுடன்
ஷெரிபா.
இந்த நாவலில் வரும் ஆண்கள் உள்நாட்டில் வியாபாரிகளாகவோ அல்லது பொருளீட்ட அயல்நாடு சென்றவர்களாகவோ இருக்கிறார்கள். பெண்களின் வாழ்வு மற்றவர்களால் முடிவுசெய்யப்படுகிறது. பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிற அந்தரங்க மொழி சில இடங்களில் உபயோகிக்கப்படுகிறது. சில மீறல்கள் பேசப்படுகின்றன. மீறல்கள் எல்லாச் சமுதாயங்களிலும் எல்லா இனக் குழுக்களிலும் இருப்பவையே. சில சமுதாயங்கள் இவற்றைப் பேச அனு மதிப்பதில்லை. அனுமதிக்கப்படாததைப் பேசுகிற துணிவுடையவர்கள் எப்போதும் தோன்றியிருக்கிறார்கள். கண்டனங்களும் அங்கீகாரங்களும் மற்றவர்களைவிட வேகமாக இவர்களை வந்தடைந்திருக்கின்றன. இவை சல்மாவையும் வந்தடையும். இந்தப் புத்தகத்தின் பலமாக, சாதகமான அம்சமாகப் பாசாங்கின்மையையும் இதிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் தோற்றுவாயாக இருந்து மொத்த நாவலிலும் அடி நாதமாக ஒலிக்கிற வலியையும் சொல்ல வேண்டும்.
ஒரு சித்திரத்தின் வெற்றி என்பது ஓவியர் உபயோகிக்காத வண்ணங்களிலும் தீட்டாத தீற்றல்களிலும் உள்ளது என்று சொல்லப்படுவதுண்டு. இந்த நாவல் வலியிலிருந்து தோன்றியிருக்கிறது. எழுத்தாளர் வலியை எழுத முயற்சித்திருக்கிறார். இதனால் நாவல் நீண்டுபோகிறது. இது சல்மாவின் முதல் நாவல். இந்த நாவலின் சாதகமான அம்சமான பாசாங்கின்மையைத் தக்க வைத்துக்கொண்டு, வலியைப் பற்றி எழுதாமல் வலியிலிருந்து மட்டும் அவர் எழுதும்போது தமிழுக்குச் சிறந்த நாவல் ஒன்றை அவரால் தர முடியும்.
இரண்டாம் ஜாமங்களின் கதை - 1
இரண்டாம் ஜாமங்களின் கதை - 2
இரண்டாம் ஜாமங்களின் கதை - 3
இரண்டாம் ஜாமங்களின் கதை - 4
இரண்டாம் ஜாமங்களின் கதை - 5
இரண்டாம் ஜாமங்களின் கதை - 6
Montag, Juli 17, 2006
Abonnieren
Posts (Atom)