Samstag, September 30, 2006

மகப்பேறும் மகளிர் மருத்துவமும்- நூல்

நூல் வெளியீட்டு விழா!
- நக்கீரன் -
August-2003

ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்குப் போவதென்றால் என் மனம் திக்குத் திக்கு என்று அடிக்கும்.

கூட்டம் வருமா? நூல் விற்பனையாகுமா? நூலாசிரியர் போட்ட முதலைத் திருப்பி எடுப்பாரா? இப்படி ஆயிரம் கேள்விகள் மனதில் கூத்தாடும்.

சென்ற சனிக்கிழமை 'மகப்பேறும் மகளிர் மருத்துவமும்" என்ற நூல் வெளியீட்டு விழாவிற்குப் போனபோது என் மனதுக்குள்ளே இதே உணர்வலைகள்தான்.

ஒவ்வொரு கதாசிரியனும், கவிஞனும், கட்டுரையாளனும் தனது படைப்புக்கள் நூல் வடிவில் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இது ஒரு நியாயமான ஆசை.

சிக்கல் என்னவென்றால் எழுதினவனே அந்த நூலைத் தனது பொருட் செலவில் புத்தகமாக்க வேண்டும்! தனது செலவில் வெளியீட்டு விழாவை நடத்த வேண்டும்!

வெளியீட்டு விழாவில் புத்தகங்கள் விற்பனையானால் சரி. இல்லாவிட்டால் முதலுக்கே மோசம் வந்துவிடும்.

பொதுவாக தமிழ்மக்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் மிகக் குறைவு. அதைவிடக் குறைவு காசு கொடுத்து புத்தகங்களை வாங்கிப் படிப்பது.

நகைக்கடை, சேலைக்கடை இவற்றுக்குப் போனால் கூட்டம் ஓகோ என்றிருக்கும். கடை திறக்கு முன்னரே வாங்குவோர் கியூ வரிசையில் கால் கடுக்க நிற்பார்கள்.

புத்தகக் கடைக்குப் போனால் அது வெறிச் சோடிப் போய்க் கிடக்கும். ஆக மிஞ்சினால் இரண்டொரு தலைக் கறுப்பைக் காணலாம்!

ஆனபடியால்தான் ரொறன்ரோவில் நூற்றுக் கணக்கான புடவைக் கடைகள், நகைக் கடைகள் கொடிகட்டிப் பறப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது! மறுபுறமாக இரண்டு அல்லது மூன்று புத்தகக் கடைகள் பாயாசத்துக்கு முந்திரி போட்டமாதிரி இருக்கின்றன.

நான் அங்காடி உரிமையாளர்களை குறை சொல்வதாக யாரும் எண்ணிவிடக் கூடாது. ஒரு முதலாளித்துவ பொருளியல் அமைப்பில் மக்கள் எதை எதை விரும்புகிறார்களோ அவையே சந்தைக்கு வருகின்றன. அவற்றையே கடைக்காரர்கள் விற்பனைக்கு வைப்பார்கள்!

ஒரு திருமண வீடா? கோயில் தேர் அல்லது தீர்த்தத் திருவிழாவா? பெண்கள் பல நூறு டொலர்கள் செலவழித்து வாங்கிய நகைகளை கழுத்து கை நிறைய போட்டுக் கொண்டு காஞ்சிப் பட்டுடுத்து முகம் முழுதும் பவுடரை அப்பிக் கொண்டு கொண்டைக்கு பூக்களை வைத்துக்கொண்டு ஒரு நடமாடும் சேலை-நகைக் கடைமாதிரி அலங்காரமாகப் போகிறார்கள்.

இந்த அலங்கரிப்பில் ஆண்கள் மட்டும் பாவங்கள். ஒரு கால் சட்டை, ஒரு கோட், ஒரு சேட் அல்லது பட்டு வேட்டி சால்வை. மேற்கொண்டு மிஞ்சினால் கழுத்துக்கு தங்கச் சங்கிலி. அவ்வளவுதான்.

தமிழர்களுடைய வீடுகளில் கண்டிப்பாக சாமி அறை இருக்கும். சாமி அறை இல்லாத வீட்டையே பார்க்க முடியாது! ஆனால் யார் வீட்டிலும் புத்தக அறை இருக்காது! புத்தகம் வாங்கினால் அல்லவா புத்தக அறை வேண்டும்?

ஆங்கிலேயர்கள் அப்படி இல்லை. நிறைய வாசிக்கிறார்கள். நிறைய நூல்களைக் காசு கொடுத்து வாங்குகிறார்கள். உணவுக்கு உடைக்குச் செலவழிப்பதுபோல உழைப்பில் ஒரு பகுதியை புத்தகம் வாங்குவதில் செலவிடுகிறார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு நல்ல நூல் எழுதினால் போதும். அடுத்த நாளே அதை எழுதிய நூலாசிரியர் கோடீசுவராக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது.

முன்னாள் அமெரிக்க சனாதிபதி கிளின்டனின் மனைவி கிலாறி கிளின்டன் 'வாழும் வரலாறு" ("Living History") என்ற பெயரில் 562 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

நூலுக்கு பிள்ளையார் சுழி போடுமுன்னரே முற்பணமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர் வாங்கி விட்டார். நூல் வெளிவந்தபின் 3 மில்லியன். ஆக மொத்தம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்து விட்டார்.

இவரை தூக்கி அப்படியே சாப்பிட்டு விட்டார் இன்னொரு பெண் எழுத்தாளர். பெயர் Ms. J.K. Rowling. இவர் Harry Potter என்ற தலைப்பில் புத்தகங்களை எழுதி வருகிறார். இது சிறுவர்களுக்கான மாயாஜால மந்திர தந்திரப் புத்தகம். முதல் நான்கு புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இந்தப் புத்தகங்கள் நான்கும் 200 நாடுகளில் 200 மில்லியன் படிகள் (20 கோடி) விற்பனை ஆகின. அதன் பதிப்பாளர் Bloomsburyக்கு கிடைத்த இலாபம் 15 மில்லியன் ஸ்டேலிங் பவுண்கள்.

ஐந்தாவது "Harry Potter and the Order of the Phoenix'' என்ற புத்தகம். சரியாக சனிக்கிழமை இரவு 12.01 மணிக்கு உலகம் பூராவும் உள்ள புத்தகக் கடைகள் கதவுகளைத் திறந்து விற்பனைக்கு விட்டன. எக்கச்சக்கமான விளம்பரம்.

முதல் நாள் அமெரிக்க அமேசன் வலையத்தில் மட்டும் 760,000 படிகள் விற்பனையாகின. விலை 29.99 அ.டொலர்கள். மற்ற நாடுகளில் உள்ள கிளைகள் மூலம் 10 இலட்சம் படிகள் விற்பனையாகின.

இன்று இந்த நூலாசிரியர் உலகத்தில் உள்ள முதல் நூறு பணக்காரர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். அவரது சொத்தின் பெறுமதி பிரித்தானிய மகாராணி எலிசபெத்தைவிட அதிகமாம்!

தமிழில் ஒரு புத்தகம் வெளியிட்டால் ஆயிரம் படிகள் விற்பனையாவது அதிகம். இதற்கு இந்திய சனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய ''அக்னிச் சிறகுகள்" (தன்வரலாறு) விதிவிலக்கு. ஒரு இலட்சம் படிகள் விற்பனையாகி தமிழ்ப் புத்தக வெளியீட்டில் 'சாதனை" படைத்துள்ளது. கலைஞர் மு.கருணாநிதி எழுதிய 'தொல்காப்பியப் பூங்கா" 10,000 படிகள் விற்பனையாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த இருவரும் 'பிரபலங்கள்" என்பதுதான். ஒருவர் இன்னாள் சனாதிபதி. மற்றவர் முன்னாள் முதல்வர்.

நூல் வெளியீட்டு விழா மாலை 6.00 மணி என்று அழைப்பிதழில் போட்டிருந்தார்கள். ஆறு மணிக்கு 5 மணித்துளிகள் (Minutes) இருக்க 'டாண்' என்று ஸ்காபரோ குடிமக்கள் (Civic) மைய சபைக்குள் நுளைந்தேன்.

நான் எதிர்பார்த்தது சரிதான். விழாத் தலைவர், நூலாசிரியர், நூல் ஆய்வாளர்கள் இப்படிக் கொஞ்சப் பேர் மூலைக்கு மூலை நின்று கொண்டிருந்தார்கள். முன்வரிசை இருக்கைகள் வெறிச்சோடிக் கிடந்தது! ஆறேகால் மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவித்தார்கள். ஆறேகால் மணிக்குப் பிறகும் பத்துப் பன்னிரண்டு பேர்கள்தான் உட்கார்ந்திருந்தார்கள்!

இது விழா ஏற்பாட்டாளர்களுக்கு பெரிய சங்கடத்தைக் கொடுத்ததுபோலும். மெல்ல ஒலிவாங்கிக்கு வந்த தமிழ்க் கலை தொழில் நுட்பக் கல்லூரி பொறுப்பாளர் இராசரத்தினம் அவையோரைப் பார்த்து ''வெளியில் சிற்றுண்டி தேநீர் கோப்பி இருக்கிறது. அங்கு போய் சாப்பிட்டு விட்டு வாருங்கள். ஆனால் அவற்றை அவைக்குள்ளே தயவு செய்து கொண்டு வந்து விடாதீர்கள்"" என்று கேட்டுக் கொண்டார்.

நேரம் இப்போது மாலை 6.30. அப்போதும் கூட்டத்தைக் காணோம். மேலும் காத்திராமல் ஆறே முக்கால் மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.

திரு.சு. இராசரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழில் அறிவியல் நூல்கள் வெளிவருவது மிக அருமை. வெளிநாட்டில் 31 ஆண்டுகள் செலவழித்த ஒருவர் மருத்துவ சம்பந்தமான நூலை தமிழில் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது போற்றத்தக்கது என்றார்.

நேரம் 7.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சொல்லி வைத்தால்போல் மக்கள் இப்போது அவைக்குள் ஒருவர் பின் ஒருவராக வரத்தொடங்கினார்கள்.

விழா 6.00 மணிக்கு என்று போட்டால் ஆறு மணிக்கு விழா தொடங்குவதில்லை. இந்த சூட்சுமம் எங்கடை ஆட்களுக்கு நன்கு தெரியும். எனவேதான் ஒரு மணித்தியாலம் கழித்து வருகிறார்கள்!

வரவேற்புரையை அடுத்து வைத்திய கலாநிதி இராஜேஸ்வரி நூல் ஆய்வுரை நிகழ்த்தினார். இவர் மகப்பேற்றியல் மகளிர் மருத்துவ சிறப்பு சிகிச்சை மருத்துவர்.

நூலாசிரியர் வைத்திய கலாநிதி செ.ஆனைமுகன் எழுதியுள்ள ''மகப்பேறும் மகளிர் மருத்துவம்"" என்ற நூல் ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்களுக்கு மகப்பேறு தொடர்பான பல அரிய தகவல்களை தருகிறது. அதனைப் படித்து தாய்மார்கள் பயன் அடையலாம் என்றார். பேச்சை எழுதி வாசித்தாலும் அதனை தங்குதடையின்றி செய்து குறித்த நேரத்துக்குள் முடித்துக் கொண்டார்.

அடுத்து வைத்திய கலாநிதி விக்டர் பிஃகுராடோ, குடும்ப வைத்தியர் ஆய்வுரை நிகழ்தினார். தமிழில் மிகச் சரளமாகப் பேசக் கூடிய வைத்திய கலாநிதிகளில் இவரும் ஒருவர். ஆய்வுரை என்றால் மேற்போக்காக நூலைப் படித்துவிட்டு ஒப்புக்குப் பேசிவிட்டு அமருபவர் அல்ல. மாறாக கொடுத்த பணியை பொறுப்புணர்வோடு செய்து முடிக்கக் கூடியவர்.

இந்த வைத்திய கலாநிதியைப் பொறுத்தளவில் அவரது பெயரில்தான் சிக்கல். இலேசில் மனதில் நிற்காது. மற்றவர்களுக்கு எப்படியோ எனது அனுபவம் அதுதான்.

அவரது பெயரைக் கேட்டுவிட்டு இவர் யாரோ வெள்ளைநிறத்தவர் என்று அவரை ஒதுக்கியவர் இருக்கிறார்கள். இதனால் அவரது மருத்துவத் தொழில் தொடக்க காலத்தில் பாதிப்புக்கு ஆளானது என அறிந்தேன்.

நிகழ்ச்சி முடிந்த பின் அவரைக் கண்டு ''உங்கள் பேர் பலரது பல்லை உடைப்பதாக உள்ளது. நிச்சயமாக என் பல்லை உடைக்கிறது. இப்போதுள்ள பெயரை விட்டுவிட்டு நல்ல தூய தமிழ்ப் பெயர் வையுங்களேன்"" என்று கேட்டேன். பக்கத்தில் நின்ற இன்னொரு நண்பரும் அதையே சொன்னார்.

''ஆமாம் மாற்றுகிற யோசனை இருக்கிறது. எனது பெயரை ..........................மாற்றப் போகிறேன்""

''உங்களது புதிய பெயர் இப்போதுள்ளதைவிட மோசமாக இருக்கிறதே?""

''என்ன செய்வது. பெயரை இலேசில் மாற்றிவிட முடியாது!""

சரி. அதனை இத்தோடு விட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு வருவோம்.

''இந்த நூலாசிரியர் ஆனைமுகனுக்கும் பிள்ளையாருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. பிள்ளையார் வேதத்தை எழுதுவதற்கு தனது தந்தத்தில் ஒன்றை முறித்து எழுதினார். இந்த ஆனைமுகன் கொம்புய10ட்டரில்தான் இந்த நு}லை எழுதி முடித்தார். கொம்புயூட்டரை முறித்தாரோ என்னவோ எனக்குத் தெரியாது. அது மட்டுமல்ல. அந்தப் பிள்ளையாருக்கும் தலைப்பெயர் எஸ் (சிவபெருமான்). இந்த ஆனைமுகனுக்கும் தலைப்பெயர் எஸ் (செல்லத்துரை)"" என வைத்திய கலாநிதி பிஃகுராடோ நகைச்சுவையோடு பேசி அவையோரை சிரிக்க வைத்தார்.

பலருக்கு மேடையில் பேச வராது. அதிலும் நகைச்சுவையோடு பேச வராது. ஆனால் வைத்திய கலாநிதி பிஃகுராடோவிற்கு இரண்டும் கை வருகிறது. இல்லை கை கொடுக்கிறது.

நூலின் அட்டைப் படத்தின் வடிவமைப்பை வைத்திய கலாநிதி பிஃகுராடோ மிகவும் சிலாகித்துப் பேசினார். உண்மையும் அதுதான். ஒரு பெண்ணின் எலும்புருவம் (ளமநடநவழn) கருப்பப்பை, கருப்பை வாய் பூரணமாக விரிவடைந்த நிலையில் குழந்தையின் தலையின் நிலைப் படம், பிறந்த குழந்தையை கையில் ஆசையோடு வைத்திருக்கும் ஒரு இளந்தாயின் படம். இவை அனைத்தும் நூல் ஒரு மகப்பேறு மருத்துவ நூல் என்பதை பளிச்சென எடுத்துக்காட்டுவதாக இருந்தன!

நூலின் தடித்த மட்டை அந்த நூல் பல தலைமுறைக்கும் பயன்படும் வண்ணம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், குறிப்பாக பெண்கள் பல முட்டுக்கட்டுக்களை எதிர்நோக்குகிறார்கள். முதலாவது அவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு போதியளவு இல்லாதது மருத்துவர்களுக்கு தங்கள் வருத்தங்களைச் சொல்லி மருத்துவம் செய்யத் தடையாக இருக்கிறது. இரண்டாவது மருத்துவரிடம் போகும்போது தங்கள் கணவர்மாரோடு சேர்ந்து போவதில்லை. இதற்கு கணவர்மார்களுக்கு இருக்கும் வேலைப்பளு அதனால் ஏற்படும் நேர நெருக்கடி காரணமாகும்.

'தமிழ்நாட்டில் வழங்கும் கலைச் சொற்கள் சிலவற்றுக்குப் பதில் இலங்கையில் வழங்கும் கலைச் சொற்களை நூலாசிரியர் பயன்படுத்தி இருந்திருக்கலாம்."

சொற்களினால் வரும் குழப்பத்துக்கு ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சொன்னார்.

'தமிழில் சிறந்த காவியம் படைப்போன் தமிழ்மொழிக்கு உயிர் கொடுக்கிறான்" 'பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்"" என்ற பாரதியாரின் ஆசையை நூலாசிரியர் நிறைவேற்றி இருக்கிறார்" என கலாநிதி பிஃகுராடோ நூலாசிரியருக்குப் புகழாரம் சூட்டினார்.

நூலாசிரியர் வைத்திய கலாநிதி ஆனைமுகன் ஒரு பேராசிரியர் மருத்துவ மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுப்பாரோ அப்படி திரையில் கணனி மூலம் புத்தகத்தின் உள்ளடக்கத்தை விளக்கி நீண்ட நேரம் பேசினார்.

முதல் பகுதி (28 அத்தியாயங்கள்) மகப்பேறு பற்றியது. இரண்டாவது பகுதி (32 அத்தியாயங்கள்) மகளிர் மருத்துவம் பற்றியது. இதைவிட 108 வரைபடங்கள் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கங்களின் எண்ணிக்கை 672.

'இந்த நூலின் விற்பனையால் வரும் வருவாய் தமிழர் வாழ்க்கை, கலாசாரம், தமிழ்மொழி முன்னேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புள்ள அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்" என நூலாசிரியர் பலத்த கை தட்டலுக்கு மத்தியில் அறிவித்தார்.

புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய பேராசிரியர் தொ.பரமசிவன் ஒரு புத்தக வெளியீட்டுவிழாவிற்கு இவ்வளவு பேர் திரளாக வந்திருப்பது தனக்கு வியப்பாக இருக்கிறதாக சொன்னார். தமிழ் நாட்டில் புத்தக வெளியீட்டுக்கு 50-60 பேர் இருக்கக்கூடிய மண்டபமே தெரிவு செய்யப்படுகிறது என்றார். விழாவில் பேசுகிறவர்களும் அநேகமாக ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். ஆனால் இங்கு உரையாற்றிய அத்தனை வைத்தியக் கலாநிதிகளும் அழகான தமிழில் பேசினார்கள். 'அறிவியல்பற்றிய நூல்களுக்கு தமிழில் பஞ்சம் இருக்கிறது. மருத்தவம்பற்றி தமி;ழில் எழுதப்பட்ட மூன்றாவது நூல் இது" என்றார்.

நூல் ஆய்வுக்கு வைத்திய கலாநிதிகளை மட்டும் தேர்ந்தெடுக்காமல் அந்தத் துறைக்கு வெளியேயுள்ள ஒருவரை வேறு கண்ணோட்டதில் ஆய்வு செய்ய விட்டிருக்கலாம்.

உரையாற்றிய வைத்திய கலாநிதிகள் புத்தகத்தைப் படித்துவிட்டு தங்களுக்குத் தாங்களே வாசகர்கள் வைத்தியம் செய்ய எத்தனிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள். இது ஒரு வருமுன் காக்கும் தற்பாதுகாப்பு நடவடிக்கை என்று நினைக்கிறேன்!

ஒரு மொழி வளர வேண்டும் என்றால் அந்த மொழி நாளும் பொழுதும் எங்கும் எதிலும் எல்லோராலும் எல்லாத் தளங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும்.

இன்று தமிழ் நாட்டில் நீதிமன்றங்களில், பணிமனைகளில், பல்கலைக் கழகங்களில் (தஞ்சைப் பல்கலைக் கழகம் விதி விலக்கு) ஆங்கிலமே அரசோச்சுகிறது. வழிபாட்டுத் தலங்களில் வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தத் தடைக் கற்கள் இருக்கும்போது தமிழ்மொழி எவ்வாறு வளர முடியும்?.

தமிழ்மொழி கொஞ்சமாவது வாழ்கிறது என்றால் அது தமிழீழத்தில் மட்டுந்தான்.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 100 ஆண்டுகளில் 40 மொழிகள் அழிந்துவிடும் என்றும் அதில் தமிழ்மொழியும் ஒன்று என்று தெரிவிக்கிறது.

எதிர்காலத்தில் தமிழ்மொழி மெல்லச் சாகுமா இல்லை தப்பிப் பிழைக்குமா என்பது உலகெங்கும் பரந்து வாழும் ஏழு கோடி தமிழ்மக்கள் கைகளிலேயே இருக்கிறது.

தன் பங்குக்கு நூலாசிரியர் வைத்திய கலாநிதி ஆனைமுகன் அறிவியல் தமிழுக்கு ஒரு கொடியேற்றம் செய்து வைத்திருக்கிறார்! பாராட்டுக்கள்!

இந்நூலினை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள்:
S.Ahnaimugan
P.O.Box 5291
Palmerston North
New Zealand
E-mail:ahnaimugan@inspire.net.nz

- நக்கீரன் -
August-2003