Dienstag, Dezember 23, 2008

மார்த்தாஹரி

புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை
- கி. அ. சச்சிதானந்தம்

ஓர் அசலான நாவல் தனித்தன்மையோடு இருக்கும்; தனக்கென்று ஒரு முகவரியைக் கொண்டிருக்கும்; அப்போதுதான் அது இலக்கியமாகிறது. மீண்டும் மீண்டும் படிக்கப்படுகிறது. நினைவில் எழுந்து அசைபோட வைக்கிறது. அதைப் பற்றிய வினாக்கள் எழுகின்றன; விடைகள் கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஒரு சமயத்தில், கிடைத்த விடை சரியெனப்படுகிறது, பின்னால் சரியில்லை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட நாவல்தான் ‘மாத்தா ஹரி - புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை.’

இது நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரண்டாவது நாவல். மனித வாழ்க்கையை வரையறுத்துவிடலாம். ஒரு சூத்திரத்தில் சொல்லிவிடலாம் என்பதெல்லாம் அர்த்தமற்றது. சொல்லிவிடலாம் என்பவன் முட்டாள்.

மாத்தா ஹரி - ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை’ புறப்பட்டவள் எங்கு போய்ச் சேர்ந்தாள் என்று குறிப்பிடவில்லை. அவள் போய்ச் சேர்ந்தது பிரெஞ்சு நாட்டுக்கு. புதுச்சேரிக்குத் திரும்பி வராமலே அங்கு கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். கதை என்றால் ‘இட்டுக் கட்டியது’, ‘கற்பனை செய்யப்பட்டது’ என்று பொருள். ஆனால் படிக்கும்போதும் படித்து முடித்துவிட்டபோதும் அப்படி ஓர் உணர்வே தோன்றவில்லை. இந்நாவலை நிதானமாகப் படித்துப் போகவேண்டும். கவனம் சிதறாமல் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் தடுமாற்றம், குழப்பம், என்ன படித்தோம் என்று பின்னோக்கி படித்த பக்கங்களைப் புரட்டவேண்டும். அப்படி நாவலின் சொல்லாடல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா கதைமாந்தர்களும் தன்மையிலும் படர்க்கையிலும் பேசுகிறார்கள். முக்காலமும் அதன் நேர் வரிசையில் வராமல் நிகழ்காலச் சம்பவங்கள் இறந்தகாலத்திலும், இறந்தகாலச் சம்பவங்கள் நிகழ்காலத்திலுமாக நாவலில் எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வப்போது ஆசிரியர் வந்துவிடுவார். அவர் வருவதற்கும் காரணம் இருக்கிறது. இந்தப் புதுச்சேரிப் பெண்ணான பவானியை ஆசிரியருக்குத் தெரியும் என்பதனால்.

இந்த நாவலின் தொடக்கம், பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படமான ‘மகாத்மா காந்தி’ நினைவுக்கு வந்தது. இத்திரைப்படத்தின் முதற்காட்சியே மகாத்மா காந்தி சுடப்படுகிறார். காது செவிடுபட பின்னணி சப்தம். இப்படம் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிப்பதாகும். காந்தி வாழ்க்கையைக் காட்டிவிட்டுத்தானே இறுதியாக அவர் இறப்பைக் காட்டி படத்தை முடித்திருக்கவேண்டும். மாறாக, இறப்பை முதலில் காட்டிவிட்டு வாழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறதே. திரைப்படம் என்பதனால் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளலாமா என்று எழும் வினா தர்க்கரீதியானதுதான். சிந்தித்துப் பார்த்தபோது காந்தி இறந்துவிட்டார்; ஆனாலும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதைக் காட்டவேதான் அந்த உத்தி கையாளப்பட்டதாக உணர்ந்தேன். இது படைப்புச் சுதந்திரம்; இதுதான் கலை.

இந்நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண் பவானியின் வாழ்க்கை. அவளின் மரணம் நாவலின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்படுகிறது. ‘ஸ்ட்ராஸ்பூர் நகரின் மத்திய கல்லறையில் அவள் இருப்பிடம் (பக். 19) ஒன்று, இரண்டு, மூன்றாவதாக இருந்த கல்லறையில், பவானி தேவசகாயம் பிறப்பு 27. 06. 1959, இறப்பு 10. 02. 1992’ (பக். 20).

ஹரிணி தன் தாய் பவானி தேவசகாயத்தின் மரணம் தற்கொலையா அல்லது இயற்கையாக சம்பவித்ததா என்பதைக் கண்டறிய அவளுடைய வாழ்வில் குறுக்கிட்டவர்களைச் சந்திப்பதால் கிடைக்கும் தகவல்களேதான் இந்த நாவல். பவானி வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவர்கள்: பத்மா, தேவசகாயம் - இவர்கள் தமிழ் பிரான்சு குடிமக்கள், எலிசபெத், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ பிரான்சு நாட்டு வெள்ளைக்காரர்கள்.

ஹரிணி தன் பெற்றோர்களான தாய் பவானி, தந்தை தேவசகாயம் ஆகியோருடன் குழந்தையாக இருக்கும்போது பிரான்சு நாட்டுக்கு வருகிறாள். பவானி இறந்துவிடுகிறாள்; தேவசகாயம் போதைப்பொருள் விற்றதற்காகச் சிறையிலடைக்கப்படுகிறான். ‘எல்லா அனாதைக் குழந்தைகளையும் போலவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் மாவட்ட நிர்வாகம் பவானி தேவசகாயத்தின் மகள் ஹரிணியை வளர்க்கும் பொறுப்பையும் ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. அதற்கான உதவித்தொகையையும் கொடுத்து வந்தது.’ (பக். 22). ஒரு கம்பெனியில் வேலை செய்யும் இளம் பெண்ணாக, சுதந்திரம் உள்ளவளாக, தனியாக வாழ்பவளாக அறிமுகமாகிறாள். ‘நேற்று மாலை நிர்வாக இயக்குநரான இளைஞன் சிரிலோடு பாதுகாப்பு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் உறவு’ கொண்டது. (பக். 23).

இந்நாவல் கதாமாந்தர்களின் செயல்பாடுகள், எண்ணங்கள், நடத்தைகள், நோக்கங்கள், காலவரிசைப்படி சொல்லப்படாமல், முன்னும் பின்னுமாகத் தாவித் தாவி, பாய்ச்சலோடு போகின்றன. அதாவது இறந்த காலத்தின் சம்பவங்கள் முன்னதாகவும், நிகழ்காலச் சம்பவங்கள் பின்னதாகவும் சொல்லாடல் நிகழ்கின்றது; இடையிடையே ஆசிரியரின் குரல் கேட்கிறது. எண்ணங்கள் தூலப் பொருள்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. புறத்திலுள்ள தூலப் பொருளா, மன ஓட்டங்களா? (எ. கா. பக். 44-45)

பவானியின் கதைதான் இந்நாவல். அவள் யார்? பிரெஞ்சுக்காரியான எலிசபெத் முல்லெர் சொல்கிறாள் ‘மயக்கமடையாத குறை. அப்படியொரு அழகுப் பெண்மணியை என் வாழ்நாளில் அதற்கு முன்பு சந்தித்ததில்லை. அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் சரி, அன்றைக்கு அக்கட்டடத்தில் வேறுபணியில் இருந்த மற்ற ஊழியர்களும் சரி சிலையாகச் சமைந்து போனார்கள். வாளிப்பான உடல், பட்டினைப் போன்ற முகம், நாசி துவாரங்களை ஒளித்த மூக்கு, உலர்ந்திராத சிவந்த உதடுகள், இடையில் நிழலாடும் வெண்பற்களின் உதவியோடு உதடுகள், சிரிக்க முயல்வது போன்ற பாவனை, வெல்வெட் போல இரண்டு விழிகள். தீப்பொறி போல கண்மணிகள். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியதுபோல, தலை முதல் இடைவரை நீண்டிருந்த கூந்தல்.’ (பக். 27).

பவானியை புதுச்சேரியில் வழக்குரைஞராக அறிமுகமாகிறோம். அவள் சிந்தனை ‘பெண் என்பவள் பிறர் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை எனவே இதற்கு என்னால் உடன்பட முடியாது.’ (பக். 44). தேவசகாயம்தான் பவானியைத் தன்னை திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறான். கெஞ்சுகிறான். அப்போது அவள் மனம் குழம்புகிறது, மூளையைக் கசக்கிப் பிழியும் கேள்விகள், சிந்தனை ஓட்டங்கள் இவையெல்லாமே அவள் திருமணம் செய்யமாட்டாள் என்ற முடிவையே சுட்டிக் காட்டுகின்றன. அவள் பாட்டியின் தீடிரென்று சம்பவித்த மரணம் திருமணத்திற்குக் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் அவள் சின்னக் குழந்தையாகவே இருந்தபோது அவள் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டாள். ஏன் என்றால் அவளுக்கு மீண்டும் சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் பெற வேண்டுமென்று ஆசை. ஓடிப்போனவளை நினைத்து வருந்திய அவளது தகப்பனும் செத்துப் போய்விடுகிறாள். ஆக அவளுக்கு இந்த உலகத்தில் ஆதரவாக இருந்தது அவள் தந்தைவழிப் பாட்டி. பாட்டி உயிரோடு இருக்கும் வரை பவானி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தன் கவலையை வெளியிட்டுக்கொண்டிருந்தாள். அவளும் இறந்துவிட்ட பிறகு? அதனால்தான் என்னவோ தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டாள். ஆக அறிவுபூர்வமாக வாழ்க்கை போவதில்லை... அவள் தேவசகாயத்தைத் திருமணம் செய்யாமல் இருந்தால் நாவலே இல்லை! பவானி திருமணம், பிரெஞ்சு நாட்டில் அவள் வாழ்க்கை எல்லாம் ஊழ்வினையா? வாழ்க்கையை அறிவுபூர்வமாகச் சிந்தித்த பவானி தன் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டாள். தலைவிதி இல்லாமல் என்ன?

தேவசகாயம் எப்படிப்பட்டவன்? ‘அவனால பத்துப் பெண்களுக்குத் தாலி கட்டவும், நூறு பிள்ளைகளைப் பெத்துக்கவும் முடியும். என்னுடைய தகப்பனாரைவிட அவனுடைய தகப்பனாருக்கு இருக்கிற சொத்தும் அதிகம், வாங்கற பென்ஷனும் அதிகம். அவன் கவிதைகள் எழுதுவான். அவன் கொஞ்சம் வித்தியாசமானவன். ஒரு சமயம் ரஜினி படத்தை முதல் நாளே பார்க்கணும் என்பான். இன்னொரு சமயம் மார்க்கோ, •பெரேரி என்ற இத்தாலிய இயக்குநரின் படங்கள் பாத்திருக்கிறாயா என்பான். தனது பிறந்த நாளைக்கு ஒரு பெரிய ஓட்டலில் எங்களுக்கு டின்னர் கொடுத்துட்டு, மறுநாள் மடத்துக்குச் சென்று அநாதைப் பிள்ளைகளோட சாப்பிடப் போறேன் என்பான்.’ (பக். 59).
தேவா சின்னப் பையனாக இருந்தபோது, அவரின் தந்தையார் தெருவில் மாம்பழம், வெள்ளரிப்பிஞ்சு கூவி விற்பவளைக் கூட்டி வைத்துக்கொள்கிறார். அவளைத் தன் தாயாக தேவாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பக். 117) இவனுக்கு கஞ்சா என்ற மரியுவானா பழக்கம் ஏற்பட்டது. ‘பௌர்ணமி இரவொன்றில், திருவக்கரை வக்கிரகாளியைத் தரிசிக்கச் சென்ற இடத்தில் சாது ஒருவர், ‘அம்மனைச் சாந்த சொரூபியாக இவனுள் காண உதவும் ‘ஒளடதம்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். நாளொன்றுக்கு இரண்டு முறை இம்மருந்தை எடுத்துக்கொண்டால், குறைந்தது 150 ஆண்டுகள் உயிர்வாழலாமென உத்திரவாதம் செய்கிறார்.’ (பக். 120) விளைவு? ‘சகல புவனங்களையும் மயக்கும் மோகினியாக இவனுள் வக்கிரகாளி அம்மன்... மாத்தா ஹரி... ம். இல்லை. பவானி’. (பக். 121).

தேவசகாயம் காளி உபாசகன் என்று சொல்லக் கேள்வி. புதுச்சேரியில் இருக்கிறபோது அடிக்கடி திருவக்கரைக்குச் சென்று வருவானாம். பழம் பூவென்று வீடு முழுக்க நிறைந்துவிடும். நாக்கைத் திருத்திக்கொண்டு, கண்களை விரியத் திறந்தபடி பக்கத்திற்கு ஒன்பது கைகளென்று, கபால மாலையணிந்த காளி. முகம் மட்டுமல்ல, கரிய அந்த உடலிலும் உக்கிரத்தைப் பார்க்கலாம். அதனருகிலேயே மாலை சாற்றிய மாத்தா ஹரியின் முழு உருவப்படம். விடிய விடிய பூஜை நடக்கும். கட்டி கட்டியாய் கற்பூரத்தை எரிப்பார்கள். கத்தை கத்தையாய் ஊதுபத்தி கொளுத்துவார்கள்.’ (பக். 189).

ஆக, தேவசகாயம் பவானியின் அழகிற்காக அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவளிடம் மாத்தா ஹரியைக் காண்கிறான். பவானியைப் புணரும்போது தன் மனைவியாகவும், அதே சமயத்தில் வணங்கும் தாயாக மாத்தா ஹரியாகப் பார்க்கிறான். தேவசகாயம் ஒருவித மனநோயாளியா என்ன? பணக்காரனான தேவசகாயம் பவானியிடம் அப்படி மன்றாடி மண்டியிட்டு மணம் புரிந்துள்ளான். ஏன் கெஞ்ச வேண்டும்? “தேவா, பல முறை சொல்லிவிட்டேன். நான் மாத்தா ஹரி இல்லை. பவானி... பவானி... பவானி.” “உனக்கு பவானி, எனக்கு மாத்தா ஹரி.” காலில் விழுகிறான். மீண்டும் மீண்டும் பித்துப்பிடித்தவன் போல என் கால்களில் விழுகிறான். (பக். 88).

மாத்தா ஹரி யார்? 1917 ஆண்டில் தன் அழகான உடலை வைத்துக்கொண்டு செருமானிய நாட்டுக்கு உளவு வேலை செய்தாள் என்று பிரான்சுக்காக தூக்கிலிடப்பட்டாள். அவளைப் பற்றி ஏராளமான புத்தகங்களும், வந்திருக்கின்றன. அவள் வாழ்க்கை பற்றி விரிவான குறிப்புகள். (பக். 28லிருந்து 33; பக். 80-81) மாத்தா ஹரிக்கு என்று ஒரு சமயக்குழு அதாவது ‘கல்ட்’ உருவாகியிருக்கிறது. (பக். 176 -178).

எலிசபெத் முல்லர், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ ஆகியவர்கள் இந்த கல்ட்டுடன் சம்பந்தமுள்ளவர்கள்.

‘குளோது அத்ரியன் பிரெஞ்சுக்காரன். வயது அறுபது. ஹிப்பி, நியூடிஸ்ட், எக்கொலொஜிஸ்ட், மரணதண்டனைக்கு எதிரி. கடைசியில் மாத்தா ஹரியின் பரம ரசிகர்.

அவரது அறையின் நான்கு சுவர்களிலும் நீங்கள் பார்ப்பது அனைத்துமே மாத்தா ஹரியின் படங்கள் தாம். குழந்தையாக, விடலைப் பெண்ணாக, வாலைக்குமரியாக, தேவதையாக, குற்றவாளியாக சுவரெங்கும் மாத்தா ஹரி அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள்’. (பக். 136) பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்திலுள்ள மாத்த ஹரியின் மண்டையோடு காணாமல் போய்விடுகிறது.

இந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரோ திருடியிருக்கிறார்கள்.‘குளோது பிஞ்சிலேயே பழுத்தார். போதைப் பழக்கம் அதன் தேவைக்காக சின்னச் சின்னத் திருட்டுகள். எழுபதுகளில் ஹிப்பி இயக்கத்தில் சேர்ந்து கோவாவில் முழுநிர்வாண வாழ்க்கையை விரும்பும் கூட்டத்துடன் சேர்மானம்... ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார்.’ (பக். 138).

பவானி வாழ்க்கைக்கும், மாத்தா ஹரி வாழ்க்கைக்கும் பொதுவான, ஒற்றுமை அம்சங்கள் இல்லை. ஆனால் மாத்தா ஹரி சமயக் குழுவிலிருப்பவர்களினால் பவானி வாழ்க்கை பாதிக்கப்பட்டது அவ்வளவுதான்.

இந்நாவலின் களம் புதுச்சேரியிலும், பிரான்சு நாட்டிலும் இடம் பெறுகிறது.

புதுச்சேரி வாழ் தமிழ் பிரெஞ்சு குடிமக்கள் வாழ்க்கை துவக்கமாக வெளிப்படுகிறது. ‘பத்மாவிற்குப் பிறந்த நாள். பகல் விருந்தில் கோழி, ஆடு, ஐஸ்கிரீம் என அனைத்தும் இருந்தன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பணம். அவள் தகப்பன், பிரெஞ்சு ராணுவத்தில் துப்பாக்கி பிடித்த நேரத்தைக் காட்டிலும் வெள்ளைத்தோல் கேப்டனுக்கு பிரியாணி செய்துபோட்ட நேரங்களும், கால், கை பிடித்த நேரங்களும் அதிகம். பதினைந்து ஆண்டுகள் தெரிந்த இரண்டொரு பிரெஞ்சு வார்த்தைகளோடு பிரான்சில் தள்ளிவிட்டு புதுச்சேரியில் வீடு, கார் என்று வாங்கி வைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளின் வயிற்றெரிச்சல்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்’ (பக். 42-43) ‘நம்ம பாண்டிச்சேரிக்காரங்களைப் பத்தித் தெரியுமே. சிலர் ஒழுங்காகவும் இருக்கலாம். அவங்களைச் சொல்லலை. ஆனால் நிறைய பேர், ஒருத்தன் மாத்தி ஒருத்தன், அடுத்தவங்க வீட்டுக்குப் போறதே தன் வீட்டிலே குடிச்சது போதாதுன்னு அங்கேயும் விஸ்கி பாட்டிலைத் திறந்து வச்சுக்கணும் என்பதற்காக. வந்தவுடனேயே ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் குசினிக்குள் இருப்போம். பிரெஞ்சு ராணுவத்துல பணிபுரிந்திருப்பார்கள், அவர்களை ராணுவ வீரர்கள் என்பதைவிட எடுபிடிகள்னு சொல்லலாம். துப்பாக்கியைத் தொட்டுப் பார்க்காதவன்கூட, தான் இல்லையென்றால் பிரெஞ்சு ராணுவமே இல்லையென்பதுபோலப் பேசுவான். பிறகு எம்.ஜி.ஆர் என்பான். சிவாஜி என்பான். வேறு ஒரு மசுறும் தெரியாது. விடிய விடிய குடிப்பார்கள். பெண்களாகிய நாங்கள் மீனையும் கறியையும் வறுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த தட்டை நிரப்பவேண்டும். ’

நாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது. (எடுத்துக்காட்டாக பார்க்க பக். 46-50, பவானியின் குழந்தை பற்றியும் அவனின் தந்தையைப் பற்றிய அத்தியாயம் 7ல்.)

ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.

நூல்: மாத்தா ஹரி - புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை
ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா
பக்கங்கள்: 288
விலை: ரூ. 150
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
102, பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ்,
57, தெற்கு உஸ்மான் சாலை,
தி. நகர்,
சென்னை - 17.

மார்த்தாஹரி

அரவணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்
- வே.சபாநாயகம் -

பொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும்,
பாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் - வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை
கொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் - 'மார்த்தாஹரி' அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.

கதையின் மையம் - பெண்கள் அவர்கள் எந்த நாடாயினும் - எப்போதும், எந்த மட்டத்திலிருந்தாலும் காலம்காலமாய் அல்லல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிற வர்கள்தாம் என்பது. இருபதாம் நூற்றண்டின் மூன்று காலகட்டங்களில் மூன்று பெண்கள் - மார்த்தாஹரி, பவானி, ஹரிணி பிரான்சில் ஒரே மாதிரியான அல்லலுக்கும் வதைக்கும் ஆளாவதை மூன்று அடுக்குகளில் ஒரு துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்போடு நாவல் சொல்கிறது.

இருபதாம் நூற்றண்டின் துவக்கத்தில் ஹாலந்தில் பிறந்து பிரான்சுக்குப் போன
மாத்தாஹரி என்பவள் பார்ப்பவரை எல்லாம் வசப்படுத்தும் அற்புத அழகி. அதிகாரிகளும், இராணுவத்தினரும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவளது அழகுக்கு அடிமையாகிறார்கள். தானாய் வாய்க்கும் சந்தர்ப்பங்களினால் அவள் தன் உடலையே முன்னிறுத்தி தனக்கென ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொள்கிறாள். பின்னால் அவள் ஒரு வேவுக்காரியாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறாள். ஆனால் இறந்த பின்னரும் அவள் வழிபாட்டுக்குரிய ஒரு தேவதையென அவளது ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அவள் பெயரில் இயக்கங்களும் புனைவுகளும் பெருகி, அமானுஷ்யப் பிறவியாய் பூஜிக்கப்படுகிறாள்.

புதுச்சேரியில் ஒரு வழக்கறிஞராக இருந்த பவானி, அவள் காதலித்து மணந்த தேவசகாயத்தின் வற்புறுத்தலால் அவளுக்கு விருப்பமில்லாமலே பிரான்சுக்குச் சென்று குடியேறுகிறாள். அவள் தோற்றத்திலும் அழகிலும் அச்சு அசலாய் மார்த்தாஹரியைப் போல இருப்பதால் மார்த்தாஹரியின் பெயரால் இயங்கும் 'மார்த்தஹரி சமயக்குழு' அவளை
மார்த்தஹரியின் மறுபிறவியென்று கருதி அவளையும் வழிபாட்டுக்குரியவளாக ஆக்க முயல்கிறது. பவானியின் கணவன் தேவசகாயமும் மார்த்தாஹரியின் உபாசகனாக ஆக்கப்பட்டு¢, அவனும் பவானியை மார்த்தாஹரியென்றே நம்புவதுடன் அவளை மார்த்தாஹரியென்றே அழைக்கவும் செய்கிறான். இவர்களால் ஏற்படும் மன உளைச்சலாலும் தேவசகாயத்தின் கொடுமைகளாலும் பவானி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்குக் காரணமானவன் என்பதால் தேவசகாயமும் சிறையில் அடைக்கப்படுக்கிறான்.

பவானியின் மகள் ஹரிணி தன் தாயின் மரணம் தற்கொலை அல்ல எனச் சந்தேகித்து பவானியின் நாட்குறிப்பில் கண்ட நபர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு உண்மையை அறிய முயல்கிறாள். ஆனால் வேறொரு உண்மையை - பவானி தன்னைப் பெற்றவள் அல்ல, வளர்த்தவள் என்பதையும் தான் தேவசகாயத்துக்கும் எலிசபெத் என்பவளுக்கும் பிறந்தவள் என்றும் அறிகிறாள். அவளுக்கு ஆதரவாய் வரும் அவளது காதலன் அகால மரணமுற மனஉளைச்சலுக்கு ஆளாகிறாள். வலைத்தளம் மூலம் இரண்டாம் வாழ்க்கை பற்றி அறி¢ய முயன்று, தான் மார்த்தாஹரியின் மகள் நோனாவின் மறுபிறவி என்று நம்புகிறாள். பின்னர் தன் தகப்பன் தேவசகாயத்தைச் சிறையில் சந்தித்துவிட்டு, காணாமல் போகிறாள்.

- இப்படி ஒரே நூற்றாண்டின் முன்று காலகட்டங்களில் வாழ்ந்த மூன்று பெண்களுடைய அவல வாழ்வும் ஒரேமாதியாக அமைந்துள்ள இந்த நாவல், பதிப்புரையில் திரு.கோ.ராஜாராம் சொல்வதுபோல் 'அரவணைக்க நீளும் கைகளில் இறுக்கப்பட்டு மரணிக்கும் பெண்களின் குறியீடாக' அமைந்திருக்கிறது எனலாம்.

நாவலின் தொடக்கமே புதுமையான அறிமுகத்துடன் வாசிப்பைத் தூண்டுகிறது. நாவல் பிறந்த கதையை ஒரு மாய யதார்த்த உக்தியோடு சொல்வதில் ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.
நடக்காத, நடக்க முடியாத ஒன்றைக் கற்பிதம் செய்து, இறந்துபோன கதாபாத்திரமே கதை சொல்லியுடன் உரையாடுவதும் நாவல் முழுதும் ஆங்காங்கே தோன்றி மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதும், கதையை வளர்க்க உதவுவதுமாய் ஒரு மயக்கத்தை வாசகர்க்கு உண்டாக்கி நாவலின் சுவையைக் கூட்டுகிறார். கதை நிகழ்வுகளும் ஒரு நேர்க்கோட்டுப்பாணியில் இல்லாமல் - ஒரு திறமையான திரைப்படத் தொகுப்பாளர் காட்சிகளை வெட்டி ஒட்டி சுவைகூட்டுவது போல திரு.கிருஷ்ணா அவர்கள் காட்சிகளை மாற்றி மாற்றிச் சொல்வதும் தமிழ் நாவல் தளத்தில் ஒரு புதிய ரசமான உக்தியாகும்.

இவரது முதல் நாவலைப் போலவே இதிலும் முழுதும் பெண்களையே - அவர்களது அவலங்களையே மையப்படுத்தினாலும் இது ஒரு பெண்ணிய நாவலாக மட்டுமின்றி, நமது பெண்களின் திருமண வாழ்வோடு ஒப்பிடச்செய்கிற பிரஞ்சுக் கலாச்சாரத்தின் வித்தியாசமான கூறுகளையும், பல நுட்பமான தகவல்களையும், அதன் இந்தியப் பாதிப்புகளையும் அனுபவ
ரீதியாகப் பதிவு செய்துள்ள ஆவணமாகவும் திகழ்கிறது.

பாத்திரப் படைப்புகளும், அவை தொடர்பான புருவம் உயர்த்தும் நிகழ்வுகளும் 'கல்கி'
யின் 'சோலைமலை இளவரசி' நாவலை நினைவூட்டுகின்றன. அந்நாவலில் வருவது போலவே மார்த்தாஹரி, பவானி ஆகிய வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பாத்திரங்களின் அனுபவங்களும் இணையாக நிகழ்வது சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் உள்ளன.

நடையில் 'சுஜதா'வின் பாதிப்போடு கூடிய ஒரு லாகவம் தெரிகிறது. வாசிக்க அலுப்புத் தராத சுகமான நடை. வருணனையில் கிருஷ்ணா சோபிக்கிறார். ஸ்தல விவரணங்கள் கலைத்தன்மையுடன் அழகாக வந்திருக்கின்றன. அத்தியாயம் 4ல் மார்த்தாஹரியின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்வை வர்ணிக்கும் இடம் உருக்கமாக இருப்பதுடன்
ஆசிரியரின் அற்புதமான கலாரசனையின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள் - இன்றைய அவசர உலகில் வாசகனின் ஆயாசத்தைத் தவிர்க்க உதவும் உக்தியாகும். தேவைக்கும் அதிகமான பிரஞ்சு வார்த்தைகள் ஆங்காங்கே வாசிப்பைக்
கொஞ்சம் தடைப் படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாய் நீக்கி எழுதிவிடவும் முடியாதுதான்.

தன்னை மட்டுமின்றி, திருமதி. சுதாராமலிங்கம், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஆகிய வாழும் பாத்திரங்களையும் நாவலோடு இணைத்து எழுதி இருப்பதும், மாலதி மைத்ரி போன்ற சமகால கவிஞர்களின் கவிதை வரிக¨ளை தக்க இடங்களில் கையாண்டி ருப்பதும், பாரதியின் பாதிப்பில் - மழை பற்றிய வருணனையில் - எழுதப்பட்டிருக்கும் வரிகளும், 'உண்மையையே பேசுகிறேன், உரத்துப் பேசுகிறேன்" என்கிற ஆசிரியரின் ஒப்புதல் வாக்கு மூலம் தேவைப் படாமலே அவரது நேர்மையான, பாசாங்கற்ற பதிவு மனைதக் காட்டுவதாக உள்ளன. இதனால் திரு.நாகரத்தினம்கிருஷ்ணாவின் அடுத்த நாவலை வாசகர் விரும்பித்தேடிப் படிப்பார்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.

- நூல்: மார்த்தாஹரி
ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

மனஓசை

- Dr.எம்.கே.முருகானந்தன் -

உறங்காத மனமொன்று உண்டு' எனப் பாடினார் கவிஞர் ஒருவர். உண்மையில் அந்த ஒரு மனம் மட்டுமல்ல எந்தவொரு மனமுமே உறங்குவதில்லை.

சூழலில் நடக்கும் ஒவ்வொன்றும் அதனைப் பாதிக்கவே செய்கின்றன. தூக்கத்தில் கூட மனம் உறங்கி விடுவதில்லை. அது அன்றாட நிகழ்வுகளை அசை போட்டு கனவுகளாக அரங்கேற்றுகின்றன.

மனம் உறங்கிவிட்டால் மனிதன் மரணித்துவிட்டான் என்றே கருத வேண்டும். ஆனால் பெரும்பாலும் மனங்கள் உயிர்ப்பின்றி வெறுமனே வாழாதிருந்து விடுவதில்லை. அவை அன்பில் நெகிழ்கின்றன. துன்பத்தில் கலங்குகின்றன. கலாசார சீரழிவுகளைக் கண்டு மனம் குமுறுகின்றன. பண்பான செயல் கண்டு பெருமிதம் அடைகின்றன. அநீதியைக் கண்டு பொருமுகின்றன. அக்கிரமத்தைக் கண்டு பொங்கி எழுகின்றன.

ஆனால் ஒரு சிலரே தமது அனுபவங்களை படைப்பின் ஊடாகப் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

சந்திரவதனாவும் அத்தகையவர்தான். 'எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாத பொழுதுகளை எனது எழுத்துகளாற்றான் தேற்றியிருக்கிறேன்.' என அவரே தனது முன்னுரையில் சொல்கிறார். துன்பங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் அதன் சுமையைக் குறைக்கிறார். மகிழ்ச்சியான கணங்களை பிட்டுத் தருகிறார்.

சந்திரவதனாவின் படைப்புலகம் எளிமையானது, அதன் நிகழ்வுகள் வாழ்வோடு ஒன்றியது. நாளந்தம் தம் வாழ்வில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் அவரின் மனத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை கற்பனை மெருகூட்டாது, அப்பட்டமாகப் பதிவு செய்கிறது.

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, நாகொல்லாகம், வவுனியா, மொஸ்கோ, ஜேர்மன், லண்டன், கனடா எனப் பயணப்பட்டுத் தேடப்பட்டு அவரது ஆழ்மனத்தில் உறைந்திருந்து மீட்கப்பட்ட புதையல்கள்தான் 'மனஓசை' என்ற சிறுகதைத் தொகுப்பு.

அங்கெல்லாம் சந்திக்கும் மக்களது, முக்கியமாக தமிழர் வாழ்வினைப் பதிவு செய்கிறது. ஆய்வாளனாக, சமூகவியலாளனாக, விஞ்ஞானியாக மனிதவாழ்வை சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாக்கி பிய்த்துப் பார்க்கும் பார்வை அல்ல. ஒரு குடும்பப் பெண்ணின் பார்வை இது. அவளின் உள்ளுர் வாழ்வின் நினைவுகளையும், அதன் எதிர்மறையான புலம்பெயர் வாழ்வின் கோலங்களையும் தெளித்துச் செல்கிறது.

ஆத்தியடி வீட்டில் இருக்கும் பிச்சிப் பூவின் மணத்தில் கிறங்கும் அதே மனம் ஜேர்மனியின் பனியில் உறைந்த மரங்களிலும் லயிக்கிறது.

'காய்த்துக் குலுங்க பச்சைப் பசேலென்று இலைகளுடன் இருந்த காசல் நட்ஸ் மரம்';. பின்னர் 'இலைகள் மஞ்சளாகி ... இலைகளே இல்லாமல் மொட்டையாகி,' பின் 'பனியால் மூடப்பட்டு ஒவ்வொரு கொப்பிலும் பனித்துளிகள் குவிந்து பரந்து அழகாக....' என்கிறர் ஓரிடத்தில்.

ஆம் அவருக்கு வாழ்வை ரசிக்கத் தெரிகிறது. மனசு பூரித்து போதையாக நிறைந்து வழிகிற நேரங்களில் மட்டுமின்றி மனசுக்குள் சோகம் சுமையாக அழுத்தி துயர் சொரியக் கரையும் கணங்களிலும் கூட இயற்கையின் மேலான வாஞ்சையை, மனித உறவுகள் மீதான அக்கறையையும் பரிவையும் அவரில் காண முடிகிறது. இந்த வாலாயம் அனைவருக்கும் கை கூடுவது அல்ல.

யாழ்ப்பாணச் சமூகம் எவ்வளவு தூரம் தாங்க முடியாத சுமைகளையும் சுமந்த போதும் அவ்வளவு தூரம் அதிலிருந்து மீண்டு வாழவும் செய்கிறது.

தந்தையை இழந்தவர் எத்தனை பேர்?

தாயை, சகோதரங்களை, உற்றார் உறவினர்களை, நண்பர்களை என எவர் ஒருவரையாவது இழக்காதவர் அம் மண்ணில் இருக்கிறார்களா?.

அங்கங்களை இழத்தல், வீட்டை இழத்தல், தொழில் இழத்தல் என மற்றொரு பக்கம்.

அதற்கு மேலாக தமது உயிருக்கும் ஆபத்து ஏற்படும்போது? தாய் மண்ணிலிருந்து பிரிந்தேனும் புதுவாழ்வு பெற விழைகிறது.

அதற்காக அச் சமூகம் கொடுத்த, கொடுக்கிற விலை என்ன? 'சொல்லிச் சென்றவள்' சிறுகதை முதல் சந்திராவின் அனுபங்களாக விரியும் பக்கங்களுக்கு ஊடாக பயணப்படும்போது அந்தத் துயரங்களில் மூழ்கித் திணறும் நிலை ஒவ்வொரு வாசகனுக்கும் ஏற்படவே செய்யும்.

காதல் கல்யாணமே இன்றைய யதார்த்தம்.
உலகம் அதற்கு மேலும் சென்று விட்டது.

கல்யாணமின்றி சேர்ந்து வாழ்வதும், திருமணமாகாமலே குழந்தைகள் பெறுவதும், விரும்பங்கள் மாறினால் கட்டியவனை அல்லது கட்டியவளை பிரிந்து செல்வதும், ஒற்றைப் பெற்றாருடன் குழந்தைகள் வாழ்வதும் இன்று மேலைத் தேச வாழ்வுக்கு அன்னியமான செயற்பாடுகள் அல்ல.

இவ்வாறு இருக்கையில் 'புகைப்படத்தைப் பார்த்துவிட்டு எங்கோ வாழும் ஒருவனுக்கு மனைவியாவதற்கு தயாராவதும், ..... கண்ணாலே காணதவனை நம்பி வெளிநாட்டுக்கு ஏறிப் போக அங்கு அவன் சட்டப்படி கலியாணம் செய்யாது அல்லாட வைப்பதும், திருப்பி அனுப்ப முனைய அவள் நிரக்கதியாவதும் இப்படி எத்தனையோ அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்கிறார்.

'பாதை எங்கே', 'விழிப்பு', 'வேசங்கள்', போன்றவை அத்தகைய படைப்புகள்.

'புலம் பெயர் வாழ்வின் பெண்கள் சார்ந்த அவலங்களை இவ்வளவு ஆழமாகப் பதிவு யாரும் பதிவு செய்யவில்லை' என்ற கருத்துப்பட இராஜன் முருகவேள் கூறியிருப்பதுடன் நானும் ஓம் படுகிறேன்.

அதே நேரத்தில் புலம் பெயர் வாழ்வின் இன்னொரு பக்கமாக, 'தீரக்கதரிசனம்' கதையில் வரும் ஒரு வயதான பாட்டாவின் வாழ்வில் மூழ்கும்போது எம் மனமும் கனடாவின் பனிபோல உறைந்து விடுகிறது.

'தாங்கள் காலமை வேலைக்குப் போற பொழுது தகப்பனை வெளியிலை விட்டு கதவைப் பூட்டிப் போட்டு போயிடுவினம்' மத்தியானம் சாப்பிடுறது, ரொயிலட்றுக்கு போறது எல்லாம் அவர்கள் வந்தாப் போலைதானாம்.

வீதியோரக் கல்லில் பனியில் உறைந்து, பசியில் துவண்டு, பேசுவதற்கும் ஆள் இன்றி ஒரு பிச்சைக்காரனைப் போல பரிதாபமாக அமர்ந்திருந்த யாரோ ஒரு பாட்டாவைப் பற்றிய தகவல் இது.

'அப்ப அவர் ஏன் இங்கை இருக்கிறார். நாட்டுக்குப் போகலாம்தானே' கதாசிரியர், கூட வந்த பிள்ளையிடம் கேட்கிறார்.

'அவையள் விட மாட்டினம். அவற்றை பெயரிலை வெல்ஃபெயர் வருகிதில்லோ'.

'சத்தமில்லாமல் ஒரு கொடுமை நடந்து கொண்டிருப்பதாக' கதாசிரியர் கூறுகிறார்.

'வீட்டு காவல் நாய்கள் போல இருக்கிறம்' என அவுஸ்திரேலியா சென்ற ஒரு முதியவர் என்னிடம் முன்னொரு போது கூறியபோது மனம் வருந்தினேன்.

இவை யாவும் வெறும் கொடுமை அல்ல. பணத்தின் முன், சொகுசு வாழ்க்கைக்கு முன் மனித உணர்வுகளே இவர்களுக்கு மரணித்துவிட்டதன் வெளிப்பாடு.

நெஞ்சை உலுக்கும் நிலை இது.

பெண்ணியம் அவரது படைப்புகளில் கருத்துநிலை வாதமாகத் துருத்திக் கொண்டு நிற்பதில்லை. முக்கியமாக ஜேர்மனி நாட்டில் சில தமிழ்ப் பெண்கள் படும் அவலங்களை மிகவும் யாதார்த்தமாகச் சித்தரித்துள்ளார்.

'தாலியை நிதானமாகக் கழற்றி வைக்கும்' 'விலங்குடைப்போம்' கதையின் சங்கவி,

'என்னோடை ஒரு நாள் கோப்பி குடிக்க வருவியோ' என்ற கேள்வியோடு அதற்கு மேலானா சம்மதத்தைத் தேடும் ஆபிரிக்காரனை உறுதியோடு மறுக்கும் 'பயணம்' கதையின் கோகிலா ஆகியோர் சற்றுத் துணிச்சல்காரர்கள்.

ஆனால் அதே நேரம் 'என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ?', 'ஏன்தான் பெண்ணாய்' போன்ற கதைகளில் வரும் பெண்கள் சாந்தமானவர்கள்.

குடும்ப வாழ்வில் தாம் தினசரி அடக்கப்பட்போதும் அதிலிருந்து வெளி வராமல் பொறுத்துக் கொள்ளும் பேதைகள். தங்களை மட்டும் யோசிக்காது குழந்தைகளையும் குடும்பத்தையும் நினைத்துப் அடங்கிப் போகும் அப்பாவிகள்.

உண்மையில் இது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதுதான்.

கதைகளைப் படித்துவிட்டு உங்கள் வீட்டையும் சற்றுத் திரும்பிப் பாருங்கள்.

'டொமினிக் ஜீவா அவர்களின் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து ...' என ஆரம்பிக்கும் இந் நூலின் தலைப்புக் கதையான பொட்டு கிளாஸ் சாதீயம் பற்றியது. தாழ்த்ப்பட்ட சாதியினர் மீதான உயர்சாதிப் பெண்ணின் பரிவை எடுத்துச் சொல்கிறது.

சந்திரவதனா செல்வகுமாரன், மற்றும் அவரது சகோதரி சந்திரா ரவீந்திரன் ஆகியோரை 80களின் ஆரம்பத்திலிருந்து அறிந்திருக்கிறேன். இவரது உலகின் ஒரு பகுதி எனது உலகமும் கூட.

அவரது வீடு எனது பருத்தித்துறை டிஸ்பென்சரியிலிருந்து எனது சொந்த ஊரான வியாபாரிமூலைக்கு போகும் பாதையில் இருக்கிறது.

அவரது படைப்புகளில் வரும் பாத்திரங்களான அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் எனக்கும் பழக்கமானவர்களே.

ஏனைய பல பாத்திரங்களும் எனக்கு அறிமுகமானவர்களே.

பல நிகழ்வுகளும் எனக்கும் அன்னியமானவை அல்ல.

இதனால் இவரது இந்த நூலைப் படிக்கும்போது அக் காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை மீள அசைபோடும் வாய்ப்பு கிட்டியது.

ஆத்தியடி பிள்ளையார் கோவில், நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில்.இவ்வாறு எவ்வளவோ!

நினைக்கும்போது எவ்வாறு எமது வாழ்வு சிதைந்து விட்டது. வாலறுந்த பட்டமாக, வேரறுந்த மரமாக அல்லாடுகிறோம் என்பது மனத்தை உறுத்துகிறது.

அவரது 'மன ஓசை' என்னையும் அல்லற்படுத்துகிறது.

யாழ் மண்ணோடு உறவு கொண்ட அனைவரையும் அவ்வாறே அல்லற்படுத்தும் என்பது நிச்சயம்.

சந்திரவதனா செல்வகுமாரன் இன்று இணையத்தில் மிகவும் பிரபலமானவர். பல இணைய இதழ்களில் அவரது பல படைப்புகள் வெளியாகின்றன. தனக்கென பல வலைப்பதிவுகளையும் வைத்திருக்கிறார்.

மேலும் பிரகாசமான படைப்புலகம் அவர் பேனாவிலிருந்து ஊற்றெடுக்கக் காத்திருக்கிறது எனலாம்.

முப்பது கதைகளை அடக்கி 195 பக்கங்கள் நீளும் இத் தொகுப்பை குமரன் பிரின்ரேர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல்- 14.12.2008
நன்றி:- எம்.கே.முருகானந்தன்