Donnerstag, September 14, 2006
உயிர்ப்பு - சிறுகதைத்தொகுப்பு
7.1.2006 அன்று, அவுஸ்திரேலியாவின் mellbourne நகரில், திரு முருகபூபதி அவர்களால் தொகுக்கப் பட்ட "உயிர்ப்பு" நூல் வெளியிட்டு வைக்கப் பட்டது.
உயிர்ப்பு சிறுகதைத் தொகுப்பில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கெண்டிருக்கின்ற 20 எழுத்தாளர்களின் 20 சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன.
அவற்றில் முதற் பத்துச் சிறுகதைகள் மீதான எனது பார்வை
உசா யவாகரின் மலரொன்று கருகுகின்றதோ!
எந்த நாடு எந்தத் தேசம் எதுவாயினும் பெண் என்பவளுக்கு ஏற்படுகின்ற சில துயர்கள் தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன. உசா யவாகரின் மலரொன்று கருகுகின்றதே கதையும் இப் பிரச்சனையைத் தொட்டுள்ளது.
ஆபிரிக்கக் கண்டத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப் பட்ட இக்கதையில் சம்பியா நாட்டைச் சேர்ந்த விக்டோரியா என்ற 20வயது இளம் பெண் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பத்தில் பணிப்பெண்ணாய் பணி புரிகிறாள். அந்தக் குடும்பத்தில் நல்லவளாய் முத்திரை பதித்து நட்போடு பழகும் அவள் தனது பணியை நேர்த்தியாகவும் விசுவாசத்தோடும் செய்யும் ஒருத்தியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்.
அவள் தனது 16வது வயதிலேயே நண்பன் என்ற பெயரோடு பழகிய ஒருவனால் தாயாக்கப் பட்டுக் கைவிடப் பட்டவள். தற்போது மீண்டும் ஒருவனோடு நட்பாகி மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் இணைந்த போது எயிட்சையும் அவனிடமிருந்து பெற்று இறந்து போகிறாள்.
இரு ஆண்களிடமிருந்தும் சுகத்தையும் விட சுமைகளையே அதிகமாகப் பெற்ற விக்ரோறியாவின் இறப்பு கதாசிரியரின் மனதில் ஏற்படுத்திய பாதிப்பும், விரக்தியும் கதையின் முக்கிய அம்சங்களாக இருந்தாலும் கதையில் இன்னும் பல விடயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.
குறிப்பாக, எந்தப் புலத்தைக் கொண்டு ஒரு சிறுகதை அமைகிறதோ அந்தப் புலத்தோடு வாசகரை அழைத்துச் செல்வதும் அந்தப் புலம் பற்றிய செய்திகளை கதையினூடு வாசகனுக்குத் தருவதும் சிறப்பானது. அந்த வகையில் உசா யவாகர் வெற்றி கண்டுள்ளார். கதையில் கிடைத்த பல சுவையான தகவல்களில் சம்பியாவில் முருங்கைக்காய் மரங்கள் இருப்பதுவும் முருங்கைக்காயை அவர்கள் Devil stick என்பதுவும் நான் அறிந்திராத தகவல்கள்.
கதை இத்தனை நீளமாக இல்லாமல் குறுகலாக இருந்திருந்தால் நறுக்கென்று அமைந்த மிக அருமையானதொரு கதையாக மிளிர்ந்திருக்கும்.
அ.சந்திரகாசனின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடி
கலை வளர்பதும், தமிழ் வளர்ப்பதும் தமை வளர்ப்பதற்க்கு என்ற நிலை புலத்தில் மட்டுமல்ல தாய் நிலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் புலத்தில் கலை என்றால் என்னவென்றே தெரியாத…, தமிழ் மேல் துளி கூட அக்கறையில்லாத…, சிலர் கலை வளர்ப்பதாகவும், தமிழ் வளர்ப்பதாகவும் சொல்லிக் கொண்டு தமது அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாகவே இருக்கின்றன. இப்படியானவர்களின் பாசாங்கும் போலியும் ஓரளவு சிந்திக்கக் கூடியவர்களுக்குப் புரியாமலும் இல்லை. அ.சந்திரகாசனின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடியும் இப்படியான போலிகளைத்தான் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.
"தமிழ், தமிழ்" என்று மேடைகளில் முழங்கும் பல பிரபலங்களின் பிள்ளைகள் தமிழே தெரியாமல் இருப்பதை நாம் நடப்பிலே பார்த்திருக்கிறோம். இக் கதையிலே தமிழுக்குச் சேவை செய்வதற்காகவே சிட்னி தமிழ்ப் பாடசாலையின் தலைவராகத் தெரிவு செய்யப் படுகிறார் கணேசானந்தம். தமிழ்ப் பாடசாலையில் தமிழ் கற்பிப்பது மட்டும் போதாது. வீட்டிலும் தமிழிலேயே பேசுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றார்.
ஆனால் இவ்வளவு பெரிய அந்தஸ்து வந்த பின் அவர் மகன் வெளியிலே ஆட்களின் முன் தன்னோடு தமிழில் பேசி மானத்தை வாங்கி விடக் கூடாது என்ற மனைவியின் வேண்டுகோளை ஆமோதிக்கிறார். இது உடனடியாகச் சிரிப்பை ஏற்படுத்தினாலும் சிந்திக்கும் போது எமது சமூகத்தின் ஆரோக்கியக் கேட்டை உணர்த்துகிறது.
ரதியின் நெருடல்
அம்மா தெய்வத்துக்குச் சமனானவள்தான். அம்மாவுக்காக மகன் எதையும் விட்டுக் கொடுப்பதுவும், மகனுக்காக அம்மா விட்டுக் கொடுப்பதும் எத்தனை சங்கடமானாலும் இயல்பிலே நடக்கக் கூடிய விடயங்கள். ஆனால் இங்கே இவர்களிடையே மனைவி என்றொருத்தி வரும் போது புரிந்துணர்வுகள் சரியாக அமையாத போது தவிர்க்க முடியாத பல சங்கடங்கள் ஏற்படலாம்.
ரதியின் நெருடல் இந்தியாவைப் பின் புலமாகக் கொண்டு எழுதப் பட்ட கதையாயினும் ஒரு சாதாரண குடும்பத்தில் ஏற்படக் கூடிய அம்மா, மகன், மனைவிக்கு இடையிலான யதார்த்தமான இந்தப் பிரச்சனையைத் தொட்டிருக்கிறது.
இந்தக் கதையில் அம்மாவின் சில புரிந்துணர்வற்ற தன்மைகளும் அதனாலான சிக்கல்களும் அம்மாவை முதியோர் விடுதியில் சேர்க்குமளவுக்கு வருகிறது. இது குற்ற உணர்வுடனான சலனத்தை ஏற்படுத்தினாலும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நினைப்பில் வீட்டிலே குறையும், கூப்பாடுமாய் இருப்பதை விட அவரவர்க்கு ஏற்ற வழியில் தனியாக வாழ்வது சந்தோசத்தையும் நிம்மதியையும் தரலாம் எனபதை உணர்த்துகிறது.
கதையில் கதாசிரியர் அம்மாவைச் சந்தோசமாக வைத்திருப்பது மட்டுமல்ல… மனைவி குழந்தைகளையும் சந்தோசமாக வைத்திருப்பது ஒரு ஆணின் கடமை என்ற நல்ல விடயத்தையும் சுட்டியுள்ளார்.
கதையில் வரும் சம்பாசணைகளை பேச்சுத் தமிழிலேயே தந்திருந்தால் கதையிலும் யதார்த்தம் மிளிர்ந்திருக்கும். கதாசிரியரின் வாழ்நில வட்டாரச் சொற்களும் வாசகருக்குக் கிடைத்திருக்கும்.
சாந்தா ஜெயராயின் அம்மா இல்லாத ஒரு மணி நேரம்
அம்மா…! எமது இளமைப்பருவத்தில் அவள் இல்லாத பொழுதுகளை எம்மால் எண்ணிப் பார்க்கவே முடியாது. எமக்கு எல்லாமே அவளாகத்தான் இருப்பாள். இந்த நிலையில் அவளின் இறப்பு என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
சாந்தா ஜெயராயின் அம்மா இல்லாத ஒரு மணி நேரம் அம்மா இறந்து விட்டதாகக் கனவு கண்ட ஒரு பெண்ணின் கதை.
செல்லமாகவும், வசதியாகவும் புலத்தில் வளர்ந்த ஒரு பதினைந்து வயதுப் பெண் திடீரென அம்மாவை இழந்து விட்டால் அவளின் உணர்வுகள் எப்படியிருக்கும் என்பதை சாந்தா ஜெயராய் சொன்ன விதம் மிக அழகாக அமைந்துள்ளது.
ஆனால் அம்மா இறந்து விட்டதாகக் கனவு கண்ட ஒரு பெண்ணின் கனவில் இத்தனை விடயங்களும் வந்து விடுமா என்பது கேள்விக் குறியாகிறது. அம்மா திடீரென இறந்து விட்டால்… நினைத்துப் பார்க்கவே முடியாத விடயம். அதைக் கற்பனை பண்ணிப் பார்க்கும் போது இத்தனை உணர்வுகளும் ஒருங்கே வந்து விடுமா?
ரவியின் கரைந்துரையும் நாகங்கள்
புலம் பெயர்ந்தாலும் நாம், எமது ஊர், எம்மவர் என்ற ஒரு பற்றுதலோடும் உண்மையாகவே உதவும் நோக்கோடும் வாழ்பவர்கள் மிகச்சிலரே. இக் கதையில் வரும் பி.எம் மும் அப்படியான ஒரு நன்நோக்குடையவர். உணவு விடுதி ஒன்றை நடாத்தி தானும் வாழ்ந்து ஊருக்கும் உதவிக் கொண்டிருக்கும் அவரின் இனப்பற்றும் ஊர்ப்பற்றும் இயல்பாகவே அவரை மற்றவர்களுக்கும் உதவ வைத்தது.
அவரது அந்த நன்நோக்கை தனக்குச் சாதகமாக்கி அவரது உதவியைப் பெற்று அவரது உணவு விடுதியிலே வேலை செய்து தன்னை நிலைப் படுத்திக் கொண்ட ஒருவர் அவருக்கு எதிராகச் செயற்பட முனைந்தது ஊரிலே இரும்புக் கடையில் வேலை செய்த ஒருவர் சில வருடங்களில் தானே இரும்புக்கடை ஒன்றைத் திறந்த ஏமாற்று வித்தையை ஞாபகப் படுத்தியது.
புவனா இராசரட்ணத்தின் அர்த்தங்கள்
பணம் தேடுவது ஒரு அவசியமான செயற்பாடாயினும் புலத்தில் சக்திக்கு மீறி வீடு கார் தளபாடம் என்று வாங்கி விட்டு அதற்காக தமது வாழ்வைத் தொலைப்பவர்கள் பலர். இவர்களில் பலர் தமது பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் தேவைப்படும் அன்பு அணைப்பு ஆதரவைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. பணத்தாலும் பொருளாலும் பிள்ளைகள் திருப்தி அடைந்து விடுவார்கள் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு பிள்ளைகளையே தொலைத்து விடுவார்கள்.
புவனா இராசரட்ணத்தின் அர்த்தங்கள் கதையிலும் பெற்றோர் வேலை வேலை என்று திரிய வீட்டில் எந்தப் பிடிப்பும் இல்லாத சூழ்நிலை உருவாக மகன் முரளி போதை மருந்துக்கு அடிமையாகிறான். நீட்டி முழக்காமல் நறுக்கெனச் சொல்லப் பட்ட சிந்திக்க வைக்கும் கதை.
கல்லோடைக்காரனின் மறக்குமா மண்வாசைன…?
சிலர் புலம் பெயர்ந்து எத்தனை வருடங்கள்தான் ஆனாலும் அங்குள்ள நல்லவைகளைக் கண்டும் அனுபவித்தும் அந்தச் சூழலை தமக்குச் சாதகமாக்கி மகிழ்ச்சி கொள்வதை விடுத்து எப்போதுமே ஊரில் உள்ளவைகளையும், ஊரில் வாழும்போதான காலங்களையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.
இந்தக் கதையில் அவுஸ்திரேலிய மண்ணில் வாழும் ஒருவர் ஒவ்வொரு விடயத்தையும் ஊர் நடப்புகளோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு மனம் பொருமுகிறார். ஊர் நினைவுகள் மறக்க முடியாதவைதான். அதற்காக அதையே நினைத்து ஏங்கி ஏங்கி இப்படி வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்த்தும் விதமான கதை. சொல்ல வந்த விடயம் நல்ல விடயம். சற்றுக் குறுக்கிச் சொல்லியிருந்தால் சொன்ன விதமும் மிக நன்றாக அமைந்திருக்கும்.
நித்தியகீர்த்தியின் அது ஒரு பருவகால விளையாட்டு
இணையமும், மின்னஞ்சலும் காதல் பரிமாற்றங்களுக்கான ஊடகங்களாக மாறிவிட்ட இன்றைய காலத்திலும், வேலியினூடு காதல் கடிதங்களைப் பரிமாறிய அன்றைய காலத்திலும் காதல் ஒன்றேயானாலும் அதனது வெளிப்பாடுகள் வேறு விதமான சந்தோசங்களைத் தருவனவாக இருந்தன.
நித்தியகீர்த்தி அவர்களின் அது ஒரு பருவகால விளையாட்டு சொல்ல வந்த விடயம் வேறு கோணத்தில் கனமாக இருந்தாலும் கதையை வாசிக்கும் போது அன்றைய காதலும் வேலிச்சண்டையும் கறுத்தக்கொழும்பான் மாம்பழமும்.. என்று மெல்லிய கிளுகிளுப்புடன் எம்மை அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.
கவித்துவம் கலந்து நளினமாக எழுதப் பட்ட இக் கதையின் சாராம்சம், சமூகம், அந்தஸ்து... என்ற போலி கௌரவங்களுக்குப் பலிக்கடாவாகிப் போன வாணி என்ற ஒரு பெண்ணின் வாழ்வைக் கொண்டுள்ளது. பருவத்தே அரும்பிய ஒரு காதல் காரணமாக அவள் 17 வயதிலேயே தன்னை விடப் 12 வயது அதிகமான நந்தகுமாருக்கு மனைவியாக்கப் பட்டு விட்டாள். அம்மாவின் போலி கௌரவந்தான் அதற்கு முக்கிய காரணம்.
வாணியால் அந்த வயதில் அம்மாவை மீற முடியவில்லை. தற்கொலை செய்யும் எண்ணத்தையோ எங்காவது ஓடி விடும் எண்ணத்தையோ அவளால் செயற் படுத்தவும் முடியவில்லை. அதற்குள் அவள் தாயாகியும் விட்டாள். ஆனாலும் திருமண பந்தத்தில் அவள் மனம் ஒட்டவும் இல்லை. ஒரு வேளை நந்தகுமார் வாழ்வின் சூட்சுமங்களை அறிந்தவராக அவளோடு வேறு மாதிரிப் பழகியிருந்தால் அவளும் பழசுகளை மறந்து குடும்பத்துக்குள் முழுமனசோடு இணைந்திருக்கலாம். அது நடக்கவில்லை. 23 வருடங்களின் பின் தன் மகனுக்கும் ஒரு வாழ்வு அமைந்த பின் அவள் நந்தகுமாரை விட்டுப் போகத் துணிகிறாள். ஒரு புரட்சியான கதைதான்.
ஆனால் எத்தனை ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் மனைவியை விட்டுப் போவது என்பதும், மனைவி கணவனை விட்டுப் போவது என்பதும் அத்தனை சுலபமான விடயமல்ல. அது சிலரால் மட்டுமே முடிந்த விடயம். இங்கு வாணியின் குணாதிசயத்தைப் பார்த்தால் அவளிடம் 23 வருடங்களாக அந்தத் துணிவு இல்லை. 23 வருடங்களாக வராத அந்தத் துணிவு 23 வருடங்களின் பின் அவளிடம் வருமா என்ற ஒரு கேள்வி என்னுள் எழுகிறது.
இப்படியான ஒரு புரட்சியான முடிவைச் சொன்ன கதாசிரியரின் மனதில், பெண்கள் அழகாக உடுத்துவதும், நகைகள் அணிவதும் தமது அழகைப் புருசனுக்குக் காட்டுவதற்கோ அன்றி வேறு ஆண்களுக்குக் காட்டுவதற்கோ என்ற தப்பான அபிப்பிராயம் பதிந்துள்ளதைக் கதையினூடு காண முடிகிறது.
எஸ். கிருஸ்ணமூர்த்தியின் பசி
பணத்தால் எதையும் வாங்கி விடலாம் என்பது பலரின் நினைப்பு. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் சிலதை எம்மால் வாங்கி விட முடியாதென்ற உண்மையை எஸ்.கிருஸ்ணமூர்த்தியின் பசி உணர்த்துகிறது.
அவுஸ்திரேலியாவில் வசதியான சூழ்நிலையில் வாழும் தர்சனிடம் பணம் போதுமான அளவு இருந்தும் பக்கத்தில் கடைகள் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் மகளின் பசியை போக்க முடியவில்லை. மகள் பசியால் துடித்த போதுதான் ஈழத்தில் உணவின்றி அல்லலுறும் உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகம் எழுகிறது.
சுருக்கமாக நல்ல விடயமொன்றை மற்றவர்களுக்கு உணர்த்தி விட்ட கதை.
களுவாஞ்சிக்குடி யோகனின் அன்னம்
காதலும் தோல்விகளும் என்றைக்குமே தவிர்க்க முடியாதவை. காதல் தோல்விகள் எமது பெண்களைக் கூனிக் குறுக வைத்ததும், தற்கொலை வரை கொண்டு சென்றதும் போராட்டம் என்ற ஒன்று எமது நாட்டில் தொடங்குவதற்கு முன் சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.
களுவாஞ்சிக்குடி யோகனின் அன்னம் அன்றைய சீர், சீதனங்களில் காதலைத் தொலைத்தவள். ஏறத்தாள 40-45 வருடஙகளின் முன் காதலிப்பதே பாவமெனக் கருதப் பட்ட சூழலில் வாழ்ந்த அன்னமும் தற்கொலை வரை செல்லத் தயங்கவில்லை. ஆனாலும் சாகவில்லை.
உறவினரையோ, காதலனாக இருந்து ஏமாற்றிய ஆறுமுகத்தையோ பார்க்க விரும்பாமல் சிங்கப்பூருக்குச் சென்று விட்டாள். அங்கு ஒரு சந்தர்ப்பத்தில் சைமன் என்பவரோடு மனம் ஒத்துப் போக அவரோடு தன் வாழ்வையும் இணைத்து அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து விட்டாள். ஆனாலும் மனதின் அடியில் ஆறுமுகத்தின் மீதிருந்த வெறுப்பு மட்டும் அவளை விட்டு அகலவில்லை. தனது 65வது வயதில் ஒரு திருமண வைபவத்தில் எதிர் பாராத விதமாக அவனைக் காண நேர்ந்த போது உடனேயே அங்கிருந்து வெளியேறி நாட்டுக்குத் திரும்புகிறாள்.
கதை சற்று நீளமாக இருந்தாலும் சொல்லப் பட்ட விதம் நன்றாக உள்ளது. ஆனாலும் புதிய சிந்தனைகளோடு வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுமளவுக்கு தன்னை மாற்றிக் கொண்ட அன்னம் ஆறுமுகத்தைக் கணடதும் அவ்விடத்தை விட்டு நகர வேண்டுமா எனவும் எண்ணத் தோன்றுகிறது.
சந்திரவதனா
ஜேர்மனி
7.1.2006
Labels:
உயிர்ப்பு,
என்னிடமுள்ள புத்தகங்கள்,
சிறுகதைகள்
Abonnieren
Posts (Atom)