Mittwoch, Januar 21, 2009

தெரிந்த முகங்கள்

பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) - புத்தக அறிமுகம்
- பி.கே.சிவகுமார் -

பி.ச. குப்புசாமி பற்றி:

வேலூர் (வடாற்காடு) மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்தவர் பி.ச. குப்புசாமி. 35 ஆண்டுகளுக்கும் மேலாக குக்கிராமங்களில் ஆரம்பப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழிலக்கியத்தில் - குறிப்பாக பக்தி இலக்கியத்தில் -ஆழ்ந்த ரசனையும் தேர்ச்சியும் கொண்டவர். மரபுக் கவிஞர். சந்திரமௌலி, குயிலி ஆகிய பெயர்களில் அறுபதுகளில் தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதினார். எழுத்தின் மீதுள்ள மதிப்பினாலேயே எழுதுவதைக் குறைத்துக்கொண்டவர். 48 ஆண்டுகளாக ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர். ஜெயகாந்தனை நன்கறிந்த நால்வரில் ஒருவராக அடையாளம் காணப்படுபவர். இவரது கங்கவரம் சிறுகதை விட்டல்ராவால் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த கதைகளுள் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. மனைவி சரஸ்வதி ஓய்வுபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியை. ஒரு மகனும் மகளும் உண்டு.

கோபால் ராஜாராமின் பதிப்புரையிலிருந்து:

"இந்த இலட்சியவாதம் இந்த மனிதர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திவிடவில்லை. மாறாக சமூகத்தின் எளிமையான வாழ்நிலைக்குள்ளிருந்தே வெளிப்படுகிறது. மௌன உறவை வெளிப்படுத்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. பரஸ்பரம் தவறாக இல்லாத உணர்வுகளைக் கூட வெளிப்படுத்திக்கொள்ள முடியாதபடி தயக்கமும், சமூக உணர்வின் தாக்கமும், பரஸ்பர மரியாதையும் ‘கங்கவர'த்தின் நாயகன் சாரங்கனை, அவன் மிக மதிக்கிற, அனுதாபம் கொள்கிற பெண்ணுடன் ஒரு வாக்கியத்துக்கு மேல் பேச முடியாமல் செய்கிறது. காலங்காலமாய்க்காதல் கொள்ளும் பெண் தன் உணர்வுகளை வெளிப்படுத்த காதலனின் மரணப்படுக்கை வரையில் காத்திருக்கிறாள்.

‘உரமேறி மரத்துப் போகாதவனாய், வாழ்க்கையையும் அதன் ஒவ்வோர் அம்சத்தையும் மிகவும் அபூர்வமானதாய்க் கருதிக் கரைந்து போகிறவனாய்'இருந்த சாரங்கனைப் போலவே பல மனிதர்கள் இந்தக் கதைகளில் வலம் வருகிறார்கள்.

தெரிந்த முகங்கள்தான். ஆனால் நாம் கவனிக்கத் தவறிய முகங்கள் அவை.

மென்மையும் மேன்மையும் கொண்ட மனிதர்கள் இந்தக் கதைகளில் உலவுகிறார்கள். தனக்குப் பிடிக்காத ஒருவனைக் கணவனாய் ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுவேன் என்று உறுதியாய்ச் சொல்லும் சிறுமியிடமும் இந்த மென்மையும் மேன்மையும் வெளிப்படக் காணலாம்.”

ஜெயகாந்தனின் அணிந்துரையிலிருந்து:

புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவாகப் பேசுகிற ஜெயகாந்தன் பின்வருமாறு அணிந்துரையை நிறைவு செய்கிறார்.

”நண்பர் பி.ச. குப்புசாமியிடம் எனக்கு ரொம்ப பிடித்த குணம் இந்த Unassuming nature தான். இப்போது He assumes and proves that he is a perfect Talented writer! இந்தத் தொகுப்பின் மூலம் தான் ஒரு திறமையுள்ள முழுமையான எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறார்.

மகிழம்பூ காலம் கடந்த பிறகுதான் மணக்கும். நண்பர் பி.ச.கு. மகிழம்பூ ஜாதி!”

பி.ச. குப்புசாமியின் 9 சிறுகதைகள் நூலில் உள்ளன.

மொத்த பக்கங்கள் 136. விலை ரூபாய் 80. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், #102, எண் 57,பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்,தெற்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600 017. தொலைபேசி: +91-44-24329283. புத்தகத்தை இணையத்தில் ஆன்லைனில் வாங்க: http://www.AnyIndian.com

Keine Kommentare: