Mittwoch, Januar 21, 2009

சிமொன் தெ பொவ்வார்

நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் - புத்தக அறிமுகம்
- பி.கே.சிவகுமார் -

நாகரத்தினம் கிருஷ்ணா பற்றி:
நாகரத்தினம் கிருஷ்ணா பிறந்தது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் (தமிழ்நாடு) மாவட்டத்தைச் சேர்ந்த கொழுவாரி என்ற சிறு கிராமம். கல்வி, வருவாய்த்துறையில் பணி, திருமணமென இந்திய வாழ்க்கையின் பெரும்பகுதி புதுச்சேரிக்குச் சொந்தமானது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமான ஸ்ற்றாஸ்பூர் (Strasbourg) என்ற நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் (Sociology) முதுகலைப்பட்டம், பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. தொழில் வாணிபம், பகுதி நேரமொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதிவருபவர். முதல் நாவல் நீலக்கடல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்துள்ள எனி இந்தியன் பதிப்பகத்தின் மாத்தாஹரி நாவலும் விமர்சகர்களிடத்தில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், இரண்டு பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்கள், பிரெஞ்சு சிறுகதைகள் மொழிபெயர்ப்புத் தொகுப்பொன்று, பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் என்ற பெயரில் கட்டுரைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளன.

கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து:

”பிரெஞ்சு மொழியை நன்றாக அறிந்த நாகரத்தினம் கிருஷ்ணா ஆழமாய் சிமொன் தெ பொவ்வாரைப் பயின்றது மட்டுமல்லாமல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, அவர் ஆய்வு மேற்கொண்ட துறைகளான வரலாறு, தத்துவம், நடைமுறை எல்லாவற்றையும் நுணுக்கமாக அணுகியுள்ளார். அவருடைய பெண்விடுதலைக் கருத்துகளை ஒப்புக்கொண்டு அவற்றின் அடியாழத்திற்குச் சென்றுள்ளார். மிகத் தெளிவான மொழியில், தமிழருக்கு மிக அருகாமையில் சிமொன் தெ பொவ்வாரைக் கொண்டுவந்துள்ளார். ஓர் அறிவுஜீவியின் வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு இந்த நூல் ஓர் உதாரணமாய் இருக்கிறது என்றால் மிகையில்லை.”

நாகரத்தினம் கிருஷ்ணாவின் முன்னுரையிலிருந்து:

”பள்ளி வயதில் எதிர்காலத் திட்டம் குறித்து எழுதப்பட்ட வியாசங்களில் புகழ்பெற்ற எழுத்தாளராக வரவேண்டுமென்ற கனவினை வெளிப்படுத்தி பிற்காலத்தில் அதனை நனவாக்கியவர் எவருமுண்டா என்று கேட்கும்பட்சத்தில் சட்டென்று சுட்டக்கூடிய ஒரு பெயர் சிமொன் - புதிரான பெண்மணி. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரெஞ்சு இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி, தத்துவவாதி, பெண்விடுதலையை வலியுறுத்தியவர். இரண்டாம் உலகப்போருக்குப்பின் பெண்ணுரிமைக்கான தத்துவார்த்த சிந்தனைகளை அறிவுஜீவிகளுக்கு மட்டுமின்றி வெகுசனப்பார்வைக்கும் கொண்டு சென்றிருக்கிறார். பிற்காலத்தில் அவரை முன்மாதிரியாகக்கொண்டு பெண்ணியல்வாதிகள் உலகமெங்கும் நம்பிக்கையுடனும், உயிர்ப்புடனும் இயங்கினார்கள். சிறந்த நாவலாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அதாவது பெண்விடுதலை சிந்தனைகள் புதிய தளத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்பாக சிமொன் தெ பொவ்வாருடைய ‘இரண்டாமினம்' என்ற நூலே, பெண்விடுதலையில் அக்கறைகொண்ட புதுமைப்பெண்களுக்கிடையே சங்கேதமாகப் பயன்பட்டு அவர்களை ஓரணியில் திரட்டியது என்பதையும் இங்கே எழுதியாகவேண்டும்.

அரசியலாகட்டும், இலக்கியமாகட்டும், பிரான்சு நாட்டைப் பொருத்தவரை சிமொனை மையப்படுத்தியே அவர் காலத்திய நிகழ்வுகள் முன்நகர்ந்தன.”

சிமொன் தெ பொவ்வார் - ஒரு திமிர்ந்த ஞானச்செருக்கு, சிமொன் தெ பொவ்வார் - லான் போல் சார்த்ரு, சிமொன் தெ பொவ்வார் - நெல்ஸன் அல்கிரென், இரண்டாமினம் - ஒரு பார்வை, இரண்டாமினம் முதல் பாகம் - விதி, பொருள்முதல்வாதமும் பெண்களும், பெண்களும் வரலாறும், பழங்கதைகளும் பெண்களும், இரண்டாமினம் - இரண்டாம் பாகம், சூழ்நிலையும் பெண்களும், இரண்டாமினம் நூலுக்கு சிமொன் தெ பொவ்வார் எழுதிய முன்னுரை, சிமொன் தெ பொவ்வார் - நேர்காணல், சிமொன் வாழ்க்கைக் குறிப்புகள், சிமொன் படைப்புகளின் பட்டியல் ஆகிய அத்தியாயங்கள் புத்தகத்தில் உள்ளன.

மொத்த பக்கங்கள் 120. விலை ரூபாய் 70. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், #102, எண் 57,பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்,தெற்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600 017. தொலைபேசி: +91-44-24329283. புத்தகத்தை இணையத்தில் ஆன்லைனில் வாங்க: http://www.AnyIndian.com

Keine Kommentare: